‘ஆஸ்ட்ராஸெனக்கா’வின் புதிய தொழிற்சாலை; 800 பேருக்கு வேலை வாய்ப்பு

‘ஆஸ்ட்ராஸெனக்கா’வின் புதிய தொழிற்சாலை; 800 பேருக்கு வேலை வாய்ப்பு

2 mins read
1cc4ab31-4440-4bb5-a51a-e87006b32f96
‘ஆஸ்ட்ராஸெனக்கா’வின் புதிய தொழிற்சாலை 2029ஆம் ஆண்டுக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.  - படம்: ஆஸ்ட்ராஸெனக்கா

மருந்து தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஆஸ்ட்ராஸெனக்கா (AstraZeneca) சிங்கப்பூரில் புதிதாக மருந்து தயாரிப்பு தொழிற்சாலையைத் திறக்க உள்ளது.

புதிய தொழிற்சாலை துவாஸ் சவுத்தில் அமையவுள்ளது. அதன்மூலம் 800க்கும் அதிகமான புதிய வேலைகள் உருவாகும் என கூறப்படுகிறது.

பொறியியல், தொழில்நுட்பச் சேவை, உலகளாவிய விநியோகச் சங்கிலி உள்ளிட்ட பல துறைகளில் வேலை வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொழிற்சாலை 2029ஆம் ஆண்டுக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய தொழிற்சாலையில் புற்றுநோய்க்கு எதிராக போரிடும் ‘ஏடிசி’ (ADC) எனப்படும் எதிர்ப்பு சக்தி மருந்துகள் தயாரிக்கப்படும். ‘ஏடிசி’ மருந்தை முழுமையாக தயாரிக்க அனைத்து வசதிகளும் புதிய தொழிற்சாலையில் இருக்கும்.

‘ஏடிசி’ மருந்தை வர்த்தக ரீதியாக ஒரே இடத்தில் முழுமையாக தயாரிக்க ஆஸ்ட்ராஸெனக்கா நிறுவனம் கட்டும் முதல் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை இது.

கடந்த மே மாதம் புதிய தொழிற்சாலைத் திறக்க திட்டம் இருப்பதாக ஆஸ்ட்ராஸெனக்கா தகவல் வெளியிட்டது. ஆனால் அது எந்த இடத்தில் அமையும் என்று அது தெரிவிக்கவில்லை.

புதிய தொழிற்சாலை 2 பில்லியன் வெள்ளி செலவில் கட்டப்படும் என்று முன்னதாக ஆஸ்ட்ராஸெனக்கா விருப்பம் தெரிவித்தது. 

58 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் புதிய தொழிற்சாலையின் நில அகழ்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை (நவம்பர் 7) நடந்தது.

அதில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் கலந்து கொண்டார். மருந்து தயாரிப்புக்கு சிங்கப்பூர் சிறந்த இடம் என்பதை இது உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்