தேர்தல் நேரத்தில் தவறான தகவல்களைத் தடுக்க புதிய மசோதா

2 mins read
dca40d24-2d94-4fd9-9a7e-7551e95ebeb8
புதிய மசோதா நிறைவேறினால் தவறான தகவல்களுக்கு திருத்த உத்தரவை பிறப்பிக்கப்படும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேர்தல் நேரத்தில் தேர்தல் பற்றிய தவறான கண்ணோட்டங்களை ஏற்படுத்தும் தகவல்கள் பரவலாம் என்பதால் அதனை எதிர்கொள்ள புதிய மசோதா ஒன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 9) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வன்போலிகள் (Deepfakes) எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் தவறான தகவல்களும் அவற்றில் அடங்கும்.

அனைத்து இணையத்தள உள்ளடக்கங்களுக்கும் பொருந்தும் வகையில் தேர்தல் (இணையத்தள விளம்பர நம்பகத்தன்மை) திருத்த மசோதா வரையப்பட்டுள்ளது.

ஒரு வேட்பாளர் சொல்லாததை அல்லது செய்யாததைச் சொன்னதாகவோ அல்லது செய்ததாகவோ சொல்லப்படும் உள்ளடக்கங்கள் புதிய சட்டத்தின்வழி தடுக்கப்படும். செயற்கை நுண்ணறிவு அல்லாத ஃபோட்டோஷாப், டப்பிங், ஸ்பிளைசிங் போன்ற மென்பொருள் மூலம் தயாரிக்கப்படும் உள்ளடக்கங்ளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த மசோதா நிறைவேறினால் வேட்பாளர்கள், தங்களைத் தவறாக வெளிப்படுத்தும் உள்ளடக்கங்களைப் பரிசீலிக்க தேர்தல் அதிகாரியைக் கேட்டுக்கொள்ளலாம்.

அத்தகைய உள்ளடக்கங்களை மற்றவர்களும் பரிசீலிக்க கோரிக்கை விடுக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வாக்கெடுப்பு வரை சட்டவிரோதமான தகவல்களாக அவை வகைப்படுத்தப்படும்.

2025ஆம் ஆண்டு நவம்பருக்குள் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

புதிய சட்டப்படி, இணையத் தளங்களில் தடை செய்யப்பட்ட விளம்பரங்களை வெளியிடும் வெளியீட்டாளர்களுக்கு தேர்தல் அதிகாரி திருத்த உத்தரவை பிறப்பிப்பார்.

இதனைச் செய்யத் தவறிய சமூக ஊடகச் சேவை நிறுவனங்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு மில்லியன் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். மற்றவர்களுக்கு ஆயிரம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் புதிய மசோதாவை திங்கட்கிழமை (செப்டம்பர் 9) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது நிறைவேறினால் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்திலும் அதிபர் தேர்தல் சட்டத்திலும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு திருத்தப்படும்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தின்போது புதிய மசோதா இரண்டாவது வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படும்.

குறிப்புச் சொற்கள்