அத்தியாவசிய மின்னிலக்க உள்கட்டமைப்புகள் நீடித்த நிலைத்தன்மையுடனும் மீள்திறனுடனும் இருப்பதற்காகத் தரவு மையங்களை இயக்கும் நிறுவனங்களுக்கான புதிய சட்டங்களை அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
அந்த மசோதாவில் உள்ளபடி, மின்னாற்றல் திறன் சார்ந்த தேவைகளுக்கான புதிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போதிய கால அவகாசத்தைத் தரவு மையங்கள் கோரியுள்ளன.
இதுபோன்ற பல்வேறு விவகாரங்கள் மின்னிலக்க உட்கட்டமைப்புக்கான மாதிரி மசோதா வரைவு குறித்து ஜூலை 1 முதல் ஜூலை 22ஆம் தேதிவரை நடந்த பொது ஆலோசனைக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்டன.
அந்தப் பொது ஆலோசனைகளில் தரவு மைய நிறுவனங்கள், மேகக் கணிமைச் சேவை வழங்குநர்கள் உட்பட 25 துறைசார்ந்த அமைப்புகள் கலந்துகொண்டன.
ஒட்டுமொத்தமாக புதிய மசோதாவை தரவு அமைப்புகள் வரவேற்றன. அது மின்னலக்கப் பாதையின் உட்கட்டமைப்பில் முன்னோக்கிச் செல்லும் சிங்கப்பூரின் வாழ்க்கை முறையை ஆதரிப்பதாக அவை கருத்துரைத்தன.
இயற்கை வளங்கள் அதிகம் இல்லாததால் சிங்கப்பூரில் அவற்றை பாதுகாப்பதற்கும் நிலம், நீர், மீன்சாரம் ஆகியவற்றை அதிக அளவில் உள்ளடக்கிய தரவு மையங்களின் திறன் வளர்ச்சி அதிகரிப்பதன் அவசியத்தையும் அந்நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டன.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) புதிய மின்னிலக்க உட்கட்டமைப்பு மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அது அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால் பெரிய தரவு மைய நிறுவனங்களும் மேகக் கணிமைச் சேவை வழங்குவோரும் 2027ஆம் மத்திய காலத்துக்குள் உரிமம் பெறவேண்டும்.
மேலும் பயன்பாட்டுக்குத் தேவையான மின்சக்தி இருப்பதை உறுதி செய்யும் திறன், ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் அதுகுறித்து தகவல்கள் அளித்தல், போதிய பாதுகாப்பு அம்சங்கள் இருத்தல் போன்ற விதிமுறைகளை அவர்கள் பூர்த்தி செய்யவேண்டும். அவை அனைத்தும் 2027ஆம் ஆண்டுமுதல் உறுதி செய்யப்பட்டாலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் சுழற்சியால் அவ்வப்போது மேம்படுத்தப்படும்.
இணையப் பாதுகாப்பு, வர்த்தகங்கள் தொடர் சேவை வழங்குதல், சம்பவங்கள் குறித்து உரிய தகவல்களை அளித்தல் போன்ற அம்சங்களில் தடைகள் ஏற்பட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதபோது, உரிமம் பெற்ற தரவு மையங்களும், மேகக் கணிமை சேவை வழங்குநர்களும் $1 மில்லியன் வரையில் அல்லது அவர்களது ஆண்டு வருமானத்தில் 10 விழுக்காடு வரையில் அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய மசோதா வழிவகுக்கிறது.
பசுமைக்கான மாற்றத்தை முன்வைத்துள்ள புதிய மின்னிலக்க மசோதா ஏற்படுத்தியுள்ள இலக்குகளை எட்ட தங்களுக்கு உரிய கால அவகாசம் தேவை என்று தரவு மையங்கள் கேட்டுக்கொண்டன.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் (எம்டிடிஐ), தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் (ஐஎம்டிஏ) ஒருங்கிணைந்து இந்த பொது ஆலோசனைகளை நடத்தின.
நாடாளுமன்ற விவாதத்துக்கு அனுப்பப்பட்டுள்ள மசோதாவில் அடிப்படை மின்னிலக்க உட்கட்டமைப்பு (எஃப்டிஐ) உரிமம், தரவு மைய உரிமம் (டிசி) ஆகிய இரண்டு புதிய உரிமங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.


