குற்றச்செயல் வழக்குகளை தாமதப்படுத்த, நேரத்தை வீணடிக்கும் செயல்பாடு, பொய்க் கோரிக்கைகளை சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளை தடுக்க புதிய நகல் சட்டம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இதுபோன்ற நடவடிக்கைகள் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும். இந்தச் சட்டத்தின்கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஒருவருக்கு சிறைத் தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படலாம்.
மற்றவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கிலோ அல்லது வெற்றி பெற முடியாத கோரிக்கைகளை வைத்தோ நீதிமன்ற செயல்பாடுகளை தவறாகப் பயன்படுத்தும் போக்கு சிங்கப்பூரில் அதிகரித்து வருவதால் இந்த நகல் சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சு தெரிவித்தது. நீதி பரிபாலன (பாதுகாப்பு) (திருத்த) மசோதா (Administration of Justice (Protection) (Amendment) திங்கட்கிழமை, அக்டோபர் 14ஆம் தேதியன்று சட்ட துணை அமைச்சர் முரளி பிள்ளையால் தாக்கல் செய்யப்பட்டது. இத்தகைய வழக்குகள் புதிய சட்டத்தின்கீழ் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும்.
இதற்கு உதாரணமாக, வழக்கில் பிரதிவாதி ஒருவருக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில் அடிப்படையே இல்லாத சிவில் வழக்குகள் தொடுத்து இழப்பீடு கோருவது சுட்டிக்காட்டப்படுகிறது.
அத்துடன், பொய்க் கோரிக்கைகளை முன்வைத்து குற்றவியல் வழக்குகளை தாமதமதப்படுத்துவது, திரும்பத் திரும்ப அடிப்படையில்லாத விண்ணப்பங்களைச் செய்வது ஆகியவை புதிய சட்டத்தின்படி நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.இந்த சட்ட திருத்தம் நீதி பரிபாலனத்தில் தடுக்கும் விதமாக செயல்படும் போக்கை தடுக்கும் நடவடிக்கை என்று சட்ட அமைச்சு விளக்கியுள்ளது.

