புதிய ஆறு வழித்தட இணைப்புப் பாலம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) திறக்கப்பட்டதும் பொங்கோல் வெஸ்ட் வட்டார வாகன ஓட்டுநர்கள் தெம்பனிஸ் விரைவுச்சாலையை (TPE) அடைய மற்றொரு வழி கிடைக்கும்.
அந்த வழியாக பொங்கோல் நகரத்திற்குள் நுழையவும் வெளியேறவும் வசதி இருப்பதால் போக்குவரத்தில் அழுத்தம் குறையும்.
தெம்பனிஸ் விரைவுச்சாலையை அடைய தற்போது பொங்கோல் வே, பொங்கோல் ரோடு என்னும் இரு வழிகள் உள்ளன. புதிய வழி உருவாவதன் மூலம் அந்த இரு வழிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இயலும்.
யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளி அருகே அமைக்கப்பட்டு உள்ள புதிய பாலம், பொங்கோல் சென்ட்ரலையும் சிலேத்தார் லிங்கையும் இணைக்கும்.
பொங்கோல் பூங்கா இணைப்பை எளிதாக அடையும் வகையில் தடையற்ற பாதைகளையும் மேம்படுத்தப்பட்ட சாலைச் சந்திப்புகளையும் உள்ளடக்கியதாக அந்தப் பாலம் இருக்கும் என்று பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுன் ஷுவெலிங் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 31) தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சிலேத்தார் சவுத் லிங்க் எனப்படும் புதிய சாலையின் ஒரு பகுதியாக அந்தப் பாலம் இருக்கும்.
தேசிய வளர்ச்சி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சருமான திருவாட்டி சுன், இதற்கு முன்னர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்றில், சுங்கை பொங்கோல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் இருமருங்கிலும் சைக்கிள் பாதைகள் இருக்கும் எனக் கூறியிருந்தார்.
“புதிய பாலத்தின் மூலம் பொங்கோல் குடியிருப்பாளர்கள் நகரத்துக்கு வெளியே செல்லவும் திரும்பி வரவும் அதிகமான போக்குவரத்துத் தெரிவுகளைப் பெற்று பலனடைவார்கள்,” என்று அவர்கள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“பல இளம் குடும்பங்களைக் கொண்டிருக்கும் பொங்கோல் நகரம் இன்னும் வளர்ச்சி கண்டு வருகிறது. வேலைக்குச் செல்லவும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைக் காணவும் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கவும் அவர்களில் பலர் பொதுப் போக்குவரத்து வசதிகளையும் மேலும் சிலர் வாகனங்களையும் பயன்படுத்துகிறார்கள்,” என்றும் திருவாட்டி சுன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தெம்பனிஸ் விரைவுச்சாலையையும் சிலேத்தார் லிங்கையும் இணைக்கும் புதிய சிலேத்தார் லிங்க் மேம்பாலச் சாலையை நிலப் போக்குவரத்து ஆணையம் திறந்தது.