தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாசிர் பாஞ்சாங்கில் 2029இல் புதிய பேருந்து பணிமனை

1 mins read
e7016b5c-9019-4891-8a74-b0ea82a807ff
புதிய பேருந்து பணிமனை தயாரானதும், சிங்கப்பூரின் தென்பகுதியில் செயல்படும் பேருந்துகள் அதனைப் பயன்படுத்தலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹார்பர் டிரைவில் உள்ள முன்னாள் பாசிர் பாஞ்சாங் டிஸ்ட்ரிபார்க் தளத்தில் 550 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் புதிய பேருந்து பணிமனை ஒன்று கட்டப்படவுள்ளது.

கட்டுமானப் பணிகள் 2024இல் தொடங்கி, 2029இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது.

ஏறக்குறைய ஐந்தரை காற்பந்துத் திடல்களின் அளவுக்குச் சமமான 4 ஹெக்டர் பரப்பளவிலான நிலத்தில் அமையவிருக்கும் புதிய பேருந்து பணிமனை, சிங்கப்பூரின் தென்பகுதியில் செயல்படும் பேருந்துகள் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும் என்று ஆணையம் தெரிவித்தது.

2017ஆம் ஆண்டிலிருந்து காலியாக இருக்கும் பாசிர் பாஞ்சாங் இடத்தில் பணிமனை ஒன்றைக் கட்டுவதற்கான குத்தகைக்கு ஆணையம் சென்ற வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது.

இன்று பயன்படுத்தப்படாத சேமிப்புக் கிடங்குகளைச் சுற்றியுள்ள பகுதி, பாசிர் பாஞ்சாங் படகு முனையத்தைப் பயன்படுத்துவோர் அல்லது அந்தப் பகுதியில் பணிபுரிவோர் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காகப் பயன்படுவதாகத் தெரிகிறது.

புதிய பேருந்து பணிமனையில் ஏழு மாடிக் கட்டடம் ஒன்று, போக்குவரத்து ஊழியர்களுக்கான பல மாடிகளைக் கொண்ட தங்குமிடம், மற்ற கட்டடங்கள் ஆகியவை அமைந்திருக்கும்.

பிரதான கட்டடம், அன்றாடப் பேருந்துச் செயல்பாடுகள், பழுதுபார்ப்பு, பராமரிப்பு, பேருந்து நிறுத்துமிடம் போன்றவற்றுக்குத் தேவையான வசதிகளைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்