தெங்கா பேருந்துச் சந்திப்பு நிலையம் ஜூலை 21ஆம் தேதி திறக்கப்படும்.
அதோடு, புக்கிட் பாத்தோக் வெஸ்ட், புக்கிட் கோம்பாக், பியூட்டி வோர்ல்ட் ஆகிய பகுதிகளுடன் தெங்காவை இணைக்கும் புதிய பேருந்து சேவையும் தொடங்கப்படும்.
பேருந்து நிறுவனமான ‘டவர் டிரான்சிட்’ நிர்வகிக்கும் அந்தப் புதிய பேருந்துச் சந்திப்பு நிலையம் தெங்கா பொலிவார்ட்டில் அமைந்துள்ளது.
சக்கர நாற்காலி வசதிகளைக் கொண்ட கழிவறைகள், கைக்குழந்தைப் பராமரிப்பு அறை போன்ற வசதிகள் அதில் உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
அதோடு, தானியக்க நீர்க்குழாய்கள், அசைவுணர் விளக்குகள் (motion sensor lights) போன்ற எரிசக்திச் சேமிப்பு அம்சங்களும் அதில் உள்ளன.
புதிய பேருந்துச் சேவை எண் 871, பயணிகளை புக்கிட் பாத்தோக்கிலும், புக்கிட் கோம்பாக்கிலும் உள்ள டாசோங் தொடக்கப்பள்ளி, ஹில்குரோவ் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கும், புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்குக்கும் கொண்டுசெல்லும்.
அது, புக்கிட் கோம்பாக் நிலையத்தில் உள்ள வடக்குத் தெற்கு ரயில் பாதைக்கும் பியூட்டி வோர்ல்ட் நிலையத்தில் உள்ள டௌண்டவுன் பாதைக்கும் தெங்கா குடியிருப்பாளர்களை இணைக்கும்.
கூடுதலாக இரண்டு பேருந்துப் பாதைகள் புதிய பேருந்துச் சந்திப்பு நிலையத்திற்கு நீட்டிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
பேருந்துச் சேவை எண் 922, பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் நிறுத்துவதற்கு முன்னர் ‘தெங்கா கார்டன் வாக்’, ‘தெங்கா டிரைவ்’, ‘தெங்கா பொலிவார்ட்’ ஆகிய பகுதிகளில் நிறுத்தும்.
பேருந்துச் சேவை எண் 870க்கான பாதை, தெங்கா பொலிவார்ட் வழியாக நீட்டிக்கப்படும்.
மூன்று பேருந்துச் சேவைகள் குறித்த விவரங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்துச் சந்திப்பு நிலையங்களிலும் கிடைக்கப்பெறும்.
அவற்றை ‘டவர் டிரான்சிட்’ இணையத்தளத்திலும் பெறலாம் என்று ஆணையம் கூறியது.
உதவி தேவைப்படும் பயணிகள் அதிகாரிகளை நாடலாம்.
“புதிய பேருந்துச் சந்திப்பு நிலையத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப தங்களைப் பழக்கிக்கொள்ள, பேருந்து நிறுவனங்களுக்குக் கூடுதல் காலம் தேவைப்படலாம் என்பதால் பயணிகளின் புரிதலை நாடுகிறோம்,” என்று ஆணையம் கூறியது.