புதிய பேஷோர் வட்டாரத்துக்கு வசதியாக பிடோக் சவுத்தில் கட்டப்படும் பேருந்து நிலையம்

புதிய பேஷோர் வட்டாரத்துக்கு வசதியாக பிடோக் சவுத்தில் கட்டப்படும் பேருந்து நிலையம்

3 mins read
bec6dd7e-2e38-4710-941e-3af76bce00fc
பேஷோரின் பிரதான சாலையின் கிழக்கு முனையில் இந்தப் புதிய குடியிருப்பு, வர்த்தகப் பகுதி அமையவுள்ளது என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியது. இது பேஷோர் டிரைவ் வழியாக தாம்சன்-ஈஸ்ட்கோஸ்ட் ரயில் பாதையின் பேஷோர் மற்றும் பிடோக் சவுத் நிலையங்களை இணைக்கும் வசதிகளைக் கொண்ட பாதசாரிகளுக்கு உகந்த மையப்பகுதியாக இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய பேஷோர் வட்டாரத்துக்கு வசதியாக, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் வரவிருக்கும் பிடோக் சவுத் எம்ஆர்டி நிலையத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.

மார்ச் மாதம் 30ஆம் தேதியன்று நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட ஏலக்குத்தகை ஆவணங்களின்படி, இந்த வட்டாரத்துக்கான அக்கம்பக்க மையமாகத் திகழ இருக்கும் குடியிருப்பு, வர்த்தக மேம்பாட்டுப் பகுதிக்குள் இந்தப் புதிய பேருந்து நிலையம் அமைந்திருக்கும்.

மேம்பாட்டுத் திட்டத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் போன்ற சில்லறை வர்த்தக வசதிகள் இடம்பெறும் என்றும் அதிகபட்சமாக 1,280 வீடுகள் இதில் இருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. இவை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளா அல்லது தனியார் வீடுகளா என்பது தெரிவிக்கப்படவில்லை.

இதுபோன்ற பேரளவிலான குடியிருப்பு, வர்த்தக மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவடைவதற்குப் பொதுவாக ஏழு ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படும். பேஷோர் குடியிருப்புப் பகுதி 2030களின் நடுப்பகுதிக்குள் முழுமையடையும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏறத்தாழ ஒன்றரைக் காற்பந்துத் திடல்கள் அளவிலான, குறைந்தது 7,700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பேருந்து நிலையத்தில், தற்காலிகமாக ஏழு பேருந்து நிறுத்துமிடங்கள் மற்றும் சில கடைகள், உணவகங்கள் ஆகியவை அமையவுள்ளதாக ஆவணங்கள் காட்டுகின்றன.

தற்போதுள்ள அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் பேருந்து முனையம் புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் மாறும் என்று ஆணையம் தெரிவித்தது.

2001ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த முனையம், புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் இடிக்கப்பட வேண்டும். ஆணையத்தின் 2025 பெருந்திட்டம் அடிப்படையில், தற்போதைய முனையம் அமைந்துள்ள இடம் பூங்காவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

துடிப்புமிக்க வெளிப்புற வாழ்க்கைமுறையை உருவாக்குவதற்காக, கடைகள் மற்றும் உணவகங்கள் தவிர, புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்து நிலையத்தின் முதல் தளத்தில் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உடற்தகுதி மையங்கள் போன்ற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

பிடோக் வட்டாரத்தின் விரிவாக்கமாக, வரும் ஆண்டுகளில் பேஷோரில் கிட்டத்தட்ட 7,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட ஏறத்தாழ 10,000 வீடுகள் கட்டப்படும்.

பேஷோரின் பிரதான சாலையின் கிழக்கு முனையில் இந்தப் புதிய குடியிருப்பு, வர்த்தகப் பகுதி அமையவுள்ளது என்று ஆணையம் கூறியது. இது பேஷோர் டிரைவ் வழியாக தாம்சன்-ஈஸ்ட்கோஸ்ட் ரயில் பாதையின் பேஷோர் மற்றும் பிடோக் சவுத் நிலையங்களை இணைக்கும் வசதிகளைக் கொண்ட பாதசாரிகளுக்கு உகந்த மையப்பகுதியாக இருக்கும்.

புதிய குடியிருப்பு, வர்த்தகப் பகுதி பிடோக் சவுத்தை உருமாற்றும் என்றும் ஈஸ்ட்வுட் , லிமாவ், கியூ எஸ்டேட் மற்றும் பிடோக் சவுத் ஹொரைஸன் ஆகிய வட்டாரக் குடியிருப்பாளர்களுக்குப் போக்குவரத்து, சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்குத் தெரிவுகளை வழங்கும் என்றும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சருமான தினேஷ் வாசு தாஸ் கூறினார்.

“2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்படவுள்ள பிடோக் சவுத் மற்றும் சுங்கை பிடோக் எம்ஆர்டி நிலையங்களுடன் இணைந்து, இது போக்குவரத்து இணைப்பை முழுமையாக்கும்,” என்று மனிதவளத் துணை அமைச்சருமான திரு தினேஷ் கூறினார்.

புதிய சில்லறை வர்த்தக வசதிகள் தனது தொகுதி மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ‘வரவேற்கத்தக்க நிவாரணமாக’ இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்