காஸ்வே கடற்பாலத்தில் போகும் பேருந்துகளுக்குப் போக்குவரத்து நெரிசலால் ஏற்படக்கூடிய இடையூறுகள் இனி குறையக்கூடும்.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிய உட்லண்ட்ஸ் ரோட்டில் பேருந்துகளுக்கான புதிய சாலைத் தடம் உருவாக்கப்படவுள்ளது. போக்குவரத்தை சீராக்க இம்மாதம் 11ஆம் தேதி முதல் அந்தத் தடம் செயல்பாட்டுக்கு வரும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் வியாழக்கிழமை (ஜூன் 4) தெரிவித்தது. குறிப்பாக உச்சநேரத்துக்கு இது பொருந்தும்.
கிராஞ்சி லாட்ஜ் 1 வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியிலிருந்து உட்லண்ட்ஸ் கிராசிங் சந்திப்பு வரையிலான சாலையில் புதிய பேருந்துத் தடம் அமைக்கப்படும். வரவிருக்கும் பேருந்துத் தடத்தைப் பற்றி வாகன ஓட்டிகளுக்குத் தெரியப்படுத்த சாலையில் குறிப்புகளும் தகவல்களும் இடம்பெறும்.
பேருந்துத் தடத்தின் செயல்பாட்டு நேரம்
புதிய பேருந்துத் தடம் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7.30 மணியிலிருந்து 9.30 மணி வரைக்கும் மாலை ஐந்திலிருந்து எட்டு மணி வரைக்கும் செயல்பாட்டில் இருக்கும். பொது விடுமுறை நாள்களுக்கு இது பொருந்தாது.
பேருந்துத் தடம் செயல்பாட்டில் இருக்கும்போது மற்ற எல்லா வாகனங்களும் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிய உட்லண்ட்ஸ் ரோட்டின் ஆக வலது புறம் இருக்கும் தடத்தில் செல்லவேண்டும். உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு உட்லண்ட்ஸ் ரோட் வழியாகப் போவதற்குப் பதிலாக புக்கிட் தீமா விரைவுச்சாலை வழியாகச் செல்லுமாறு கார், மோட்டார் சைக்கிளோட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வாகன ஓட்டிகளைக் கண்காணிக்க நடவடிக்கை
சாலையில் தவறாக நடந்துகொள்ளும் வாகன ஓட்டிகள் பேருந்துத் தடங்களுக்குள் போவதைத் தடுக்க அப்பகுதி, அமலாக்க கோமராக்கள் வாயிலாகக் கண்காணிக்கப்படும். பேருந்துத் தடத்தை ஏற்படுத்தித் தருவதற்கான பணிகள் வரும் திங்கட்கிழமை (ஜூன் 8) முதல் புதன்கிழமை (ஜூன் 10) வரை இரவு 10 மணிக்கும் அதிகாலை நான்கு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்று ஏஷியாஒன் ஊடகம் தெரிவித்தது.
அந்தக் காலகட்டத்தில் சில சாலைத் தடங்கள் மூடப்படலாம். போக்குவரத்தில் சிறிதளவு தாமதம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

