கிம் கியட் எஸ்டேட்டில் வசிக்கும் தோ பாயோ குடியிருப்பாளர்கள் வரும் ஜூன் 8ஆம் தேதி முதல் துணைப் பேருந்துச் சேவை மூலம் நேரடியாகத் தோ பாயோ பேருந்து சந்திப்புக்குச் செல்லலாம்.
தோ பாயோ பேருந்துச் சந்திப்பிலிருந்து சேவையைத் தொடங்கும் பேருந்து எண் 230 M, கிம் கியட் அவென்யூவைச் சுற்றி தோ பாயோ பேருந்துச் சந்திப்புக்கு வருவதற்குமுன் லோரோங் 6 தோ பாயோ, தோ பாயோ ஈஸ்ட் பகுதிக்குச் செல்கிறது.
வார நாள்களில் காலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிவரை சேவையை வழங்கும் அப்பேருந்து, வாரயிறுதி மற்றும் பொது விடுமுறை நாள்களில் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிக்குத் தனது சேவையை நிறைவுசெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பேருந்துச் சேவை எண் 230 செல்லும் வழித்தடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேருந்து நிறுத்தங்களுக்குப் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பேருந்துச் சேவை எண் 230 M சேவை வழங்குமெனவும் கூறப்பட்டது.
துணைப் பேருந்து செயல்பாட்டிற்குவந்த பிறகு, தோ பாயோ நடுவம் ஒட்டியுள்ள பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே பேருந்து எண் 230 சேவை வழங்கும் என்றும் சந்திப்புக்கு அருகே உள்ள நிறுத்தங்களில் அப்பேருந்து பயணிகளை ஏற்றாது என்றும் சொல்லப்பட்டது.