தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் புதிய பேருந்துச் சேவை

2 mins read
044f839e-df0f-41c3-873e-7a4f86703f37
எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவை எண் 967 புதிதாக ஜனவரி 12ஆம் தேதி செயல்படத் தொடங்கியது. - படம்: சாவ்பாவ்

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பேருந்துச் சேவை எண் 967, பலரது பயண நேரத்தைக் குறைத்துள்ளதாக உட்லண்ட்ஸ் வட்டாரவாசிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளனர்.

எஸ்எம்ஆர்டி நிறுவனம் இயக்கும் இந்தப் பேருந்துச் சேவை, உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து முனையத்தில் தொடங்கி உட்லண்ட்ஸ் அவென்யூ 3, உட்லண்ட்ஸ் அவென்யூ 1 ஆகியவற்றைக் கடந்து பின்னர் உட்லண்ட்ஸ் டிரைவ் 17 வழியாக மீண்டும் அதே பாதையில் பயணம் செய்கிறது.

பேருந்து 12 முதல் 15 நிமிட இடைவெளியில் இயங்கி வருகிறது. இதற்கான முதல் பேருந்து காலை 5.30 மணிக்கும் கடைசிப் பேருந்து நள்ளிரவு 12.30 மணிக்கும் விடப்படுகின்றன. இந்தக் குறிப்பிட்ட பாதையில் ஆறு பேருந்துகளை 11 ஓட்டுநர்கள் தற்போதைக்கு ஓட்டுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து இணைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட பல பேருந்துச் சேவை பாதைகளில் இப்புதிய சேவை மிக அண்மையில் தொடக்கம் கண்டுள்ளது. இத்திட்டமானது பேருந்துக் கட்டமைப்பை மேம்படுத்தி, புதிய வீடமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு மேலும் சிறப்பான முறையில் சேவையாற்ற முனைந்திடும்.

மேலும், பேருந்துகளை வாங்குவதற்கும், கூடுதல் பணியாளர்களை அமர்த்துவதற்கும், புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் எட்டு ஆண்டுகளில் $900 மில்லியன் வரை செலவிடப்படும்.

புதிய, பழைய குடியிருப்பு வட்டாரங்களுக்காக மேலும் அதிக பேருந்துச் சேவைப் பாதைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து முனையத்தில் ஜனவரி 12ஆம் தேதி புதிய பேருந்துச் சேவையைத் தொடங்கி வைத்த நிகழ்வு நடைபெற்றது. போதுமான பொதுப் போக்குவரத்து இணைப்பு இல்லாத வூட்குரோவ் பகுதியில் வசிப்போருக்குப் புதிய பேருந்துச் சேவை பலனளிக்கும் என்று நிகழ்வில் கலந்துகொண்ட மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸாக்கி முகம்மது, ஹேனி சோ தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்