ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல், பார்ட்லி ரோட்டுக்கும் தெம்பனிஸ் அவென்யூ 1க்கும் இடையில் இரண்டு புதிய குறுகிய தொலைவுப் பேருந்துச் சேவைகளை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இயக்கவுள்ளது.
தெம்பனிசுக்கும் பார்ட்லிக்கும் இடையே உச்சநேரப் போக்குவரத்தை மேம்படுத்தவும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தை எளிதில் சென்றடையவும் இவை உதவும்.
பேருந்துச் சேவைகள் 129ஏ, 129பி இரண்டும் வார நாள்களில் எதிர்த் திசைகளில் சேவை வழங்கும்.
பேருந்துச் சேவை 129ஏ, ஐந்து நிறுத்தங்களில் நிற்கும். தெம்பனிஸ் அவென்யூ1ல் உள்ள தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி கிழக்கு வாயில் நிறுத்தத்தில் தொடங்கி பார்ட்லி ரயில் நிலைய வெளியேறு வழி ‘ஏ’க்கு எதிர்ப்புறம் உள்ள நிறுத்தம் வரை அது சேவை வழங்கும்.
பேருந்துச் சேவை 129பி, காம்பிர் ரிட்ஜ் கூட்டுரிமை வீட்டுக்கு அருகிலுள்ள நிறுத்தம் முதல், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி கிழக்கு வாயில் நிறுத்தம் வரை ஏழு நிறுத்தங்களில் நிற்கும்.
புதிய பேருந்துச் சேவைகள் இரண்டும் வார நாள்களில் காலை, மாலை உச்ச நேரங்களில் மட்டுமே இயங்கும். பொது விடுமுறை நாள்களில் அவை சேவை வழங்கமாட்டா எனத் தெரிவிக்கப்பட்டது.