தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாஞ்சாங், பொங்கோல், தெங்கா பகுதிகளுக்கு விரைவில் புதிய பேருந்துச் சேவைகள்

3 mins read
d1b6438c-08a6-4c46-832c-dbc0f856ab6c
புதிதாக ஆறு பயணப் பாதைகளில் பேருந்துச் சேவை வழங்கப்படும். வடகிழக்குப் பகுதியிலிருந்து நகரத்திற்கு நேரடியாகச் சென்றுதிரும்பும் ஐந்து சேவைகளும் அறிமுகப்படுத்தப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் பாஞ்சாங், பொங்கோல், தெங்கா வட்டாரங்களில் வசிப்போருக்குப் புதிதாக ஆறு பேருந்துச் சேவைகள் அடுத்த இரண்டு மாதங்களில் வழங்கப்படவிருக்கின்றன.

வடகிழக்குப் பகுதியிலிருந்து நகரத்திற்கு நேரடியாகச் சென்றுதிரும்புகின்ற மேலும் ஐந்து சேவைகளும் அறிமுகம் காணவிருக்கின்றன. அவை இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஏற்கெனவே இயங்கிவரும் பேருந்துச் சேவை எண் 114, 146 ஆகியவற்றின் பயணப் பாதைகளும் நீட்டிக்கப்படும்.

ஆணையத்தின் $900 மில்லியன் மதிப்புள்ள பேருந்து இணைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் புதிய சேவைகள் அமைகின்றன.

நகரத்திலிருந்து தொலைவில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்குக் கூடுதல் தெரிவுகளைப் புதிய சேவைகள் வழங்கும் என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறினார். அவர்கள் பெருவிரைவு ரயில் நிலையங்களுக்கு வேகமாகச் செல்லவும் அவை உதவியாக இருக்கும் என்றார் அவர்.

இந்த மாதம் (அக்டோபர் 2025) 26ஆம் தேதியிலிருந்து புதிய பேருந்துச் சேவை எண் 104 பொங்கோல் கோஸ்ட்டுக்கும் உட்லேக்கும் இடையில் செயல்படும். பொங்கோல் நார்த்‌ஷோர், சுமாங், பிடாடாரி குடியிருப்புப் பேட்டைகளில் வசிப்போரைப் பொங்கோல் கோஸ்ட், புவாங்கோக், சிராங்கூன் போன்ற எம்ஆர்டி நிலையங்களுடன் அது இணைக்கும்.

அதே நாள், சேவை எண் 984 புக்கிட் பாஞ்சாங்கிற்கும் ஜூரோங் ஈஸ்ட்டுக்கும் இடையில் இயங்கத் தொடங்கும். தெங்காவின் பிரிக்லேண்ட், டெக் வாய் பகுதிகளுக்கு அது சேவை வழங்கும். ஜூரோங் ஈஸ்ட், புக்கிட் பாஞ்சாங் எம்ஆர்டி நிலையங்களுக்கும் பலதுறை மருந்தகங்கள், பள்ளிகள் போன்றவற்றுக்கும் குடியிருப்பாளர்கள் சென்றுவர அது துணைபுரியும்.

பொங்கோல்வாசிகள், சாங்கி விமான நிலையத்திற்குச் சென்றுவர அடுத்த மாதம் 10ஆம் தேதியிலிருந்து புதிய சேவை வழங்கப்படவிருக்கிறது. சேவை எண் 44, பொது விடுமுறை தவிர்த்த வார நாள்களில் காலை, மாலை உச்ச நேரங்களில் செயல்படும்.

தெங்கா, பிரிக்லேண்ட் வட்டாரங்களில் குடியிருப்போர் நவம்பர் 17ஆம் தேதியிலிருந்து மூன்று புதிய சேவைகளை எதிர்பார்க்கலாம். அவை பேருந்துச் சேவை எண்கள் 451, 452, 453. புக்கிட் கோம்பாக், பியூட்டி வோர்ல்ட் முதலிய எம்ஆர்டி நிலையங்களுக்குப் பயணிகள் செல்ல அவை வசதியாக இருக்கும்.

தற்போதைய பயணப் பாதைகளிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் நோக்கத்துடன் அந்த விரைவுத் துணைப் பேருந்துச் சேவைகளின் எண்கள் 451லிருந்து தொடங்கும் என்று ஆணையம் தெரிவித்தது. அத்தகைய மூன்று சேவைகளின் தற்போதைய எண்கள் 298X, 979X, 21X ஆகியவை முறையே 454, 455, 456 என்ற எண்களுக்கு மாற்றப்படும்.

தற்போது புவாங்கோக் வட்டாரத்திற்குள் இயங்கும் சேவை எண் 114, இந்த ஆண்டின் இறுதிக்குள் இயோ சூ காங் பேருந்து முனையம், எம்ஆர்டி நிலையம்வரை நீட்டிக்கப்படும்.

இப்போது உட்லே முனையத்துக்கும் பார்ட்லிக்கும் இடையில் போய்வரும் சேவை எண் 146, கோவன் எம்ஆர்டி நிலையம்வரை நீட்டிக்கப்படும்.

வடகிழக்குப் பகுதியிலிருந்து நகரத்திற்கு நேரடியாகச் சென்றுதிரும்பும் ஐந்து சேவைகள் பற்றிய விவரங்களை ஆணையம் வெளியிடவில்லை.

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளிலும் பயணிகளின் பயணப் போக்குகளைக் கண்காணித்துச் சமூகத்தினரின் கருத்துகளையும் கேட்டறிந்து பேருந்துச் சேவைகளைத் தேவைக்கேற்பச் சரிசெய்யப்போவதாக ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்