சிறப்புத் தேவையுடையோர் சட்ட உதவிக்கு புதிய மையம்

சிறப்புத் தேவையுடையோர் சட்ட உதவிக்கு புதிய மையம்

2 mins read
ed723d6a-d91c-4e29-a58c-a9dc1fc179a4
திங்கட்கிழமை (மார்ச் 16), புரோ போனோ எஸ்ஜி, ராவ் குடும்ப அறநிறுவனம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிறப்புத் தேவையுடையவர்கள், மனநலச் சவால்கள் உடையவர்கள் ஆகியோர் சட்ட நடைமுறைகளை எளிதாக அணுகுவதற்கு உதவும் வகையில், புதிய சட்ட மையம் திங்கட்கிழமையன்று (மார்ச் 16) தொடங்கப்பட்டது.

‘புரோ போனோ எஸ்ஜி’, ராவ் குடும்ப அறநிறுவனம் ஆகியவற்றால் தொடங்கப்பட்டுள்ள ‘இன்க்ளூசிவ் ஜஸ்டிஸ்’ சட்ட மையம், ஒரு முழுநேர சமூக வழக்கறிஞரைக் கொண்டிருக்கும்.

சிங்கப்பூர் முழுவதும் பயணம் செய்து சிறப்புத் தேவையுடையோரை அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்றே அவர் சந்திப்பார்.

பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் பங்காளித்துவத்தை உருவாக்குவதன் மூலம், அந்த நிறுவனங்களின் வாயிலாகவே வழக்கறிஞர், திட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோர்க்குத் தேவையான சேவைகளை வழங்க இந்த மையம் இலக்கு கொண்டுள்ளது.

மனநலம் தொடர்பான குறைப்பாடு போன்ற கண்ணுக்குத் தெரியாத குறைபாடுகள் கொண்டோரும் அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களும் உதவி பெற எங்குச் செல்ல வேண்டும், எந்த மாதிரியான உதவி தேவை என்பதைப் புரிந்துகொள்வதில் உள்ள விழிப்புணர்வு இடைவெளியைக் குறைப்பதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பின் தலைமைப் பிரதிநிதி அதிகாரி சாதனா ராய் தெரிவித்தார்.

குற்றவியல் நீதி அமைப்பிற்குள் மனநலச் சவால், சிறப்புத் தேவை உடையவர்களுக்கும் (குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினர்) அரசு எவ்வாறு சிறந்த ஆதரவை வழங்க முடியும் என்பதை மறுஆய்வு செய்ய இவ்வாண்டு ஜனவரி மாதம் பணிக்குழு ஒன்று தொடங்கப்பட்டது.

அதன் செயல்பாடுகளுக்கேற்ப இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சட்ட மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, மூத்த வழக்கறிஞர் பெக்கி யீ ஆகியோர் 20 பேர் கொண்ட பணிக்குழுவிற்கு இணைத் தலைவர்களாகச் செயல்படுகின்றனர்.

த ஃபவுண்டரி சமூக மையத்தில் திங்கட்கிழமை (மார்ச் 16) இந்த மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புரோ போனோ எஸ்ஜி, ராவ் குடும்ப அறநிறுவனம் ஆகியவை கையெழுத்திட்டன.

அந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சுவா, சிங்கப்பூரில் நீதித்துறை சேவைகளை அனைவரும் எளிதாக அணுகுவதை மேம்படுத்த கூடுதலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சிறப்புத் தேவைமனநலம்புரிந்துணர்வுநீதித்துறைமையம்சட்டம்