இளைய பார்வையாளர்களுக்கு மரபுடைமை சார்ந்த பழக்கவழக்கங்களின் அர்த்தத்தையும் குறியீட்டையும் மீண்டும் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் திறக்கப்படவிருக்கிறது, ‘ஆர்ச் ஸ்குவேர்’ (ArCH Square) நிலையம்.
நவம்பர் 1ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறக்கப்படும் ஒரு புதிய தொல்பொருள் மற்றும் தொட்டுணரமுடியாத கலாசாரப் பாரம்பரிய மையம் ஆர்ச் ஸ்குவேர் நிலையம்.
இந்நிலையத்தை தேசிய மரபுடைமைக் கழகத்தின் துணை அமைப்பான ‘ஹெரிடேஜ் எஸ்ஜி’ (HeritageSG) நிர்வகிக்கிறது.
இந்த நிலையம், தொட்டுணரமுடியாத கலாசாரப் பாரம்பரிய ஆர்வலர்கள் தங்கள் கைவினைகளைக் காட்சிப்படுத்தவும் கற்பிக்கவும், பார்வையாளர்கள் சிங்கப்பூரில் உள்ள தொல்லியல் பற்றி அறிந்துகொள்வதற்கான ஓர் இடமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தொட்டுணரமுடியாத கலாசாரப் பாரம்பரியம் என்பது, நிகழ்த்து கலைகள், சமூக நடைமுறைகள், சடங்குகள், பண்டிகை நிகழ்ச்சிகள் போன்ற தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகள் அல்லது வாழ்க்கைமுறைகளைக் குறிக்கிறது.
எண் 125 ஜாலான் சுல்தானில் உள்ள இரண்டு மாடி பழைமைப் பாதுகாப்புக் கடைவீட்டில் அமைந்துள்ள ஆர்ச் ஸ்குவேர் நிலையம், அதன் தரைத் தளத்தில் கண்காட்சி மற்றும் தொல்பொருள் ஆய்வகம் அமையும் இடங்களையும், மேல் தளத்தில் நிகழ்ச்சிகள், பயிலரங்குகளுக்கான இடங்களையும் கொண்டுள்ளது.
பயிலரங்குகளில் பங்கேற்பதைத் தவிர, ஆர்ச் ஸ்குவேர் நிலையத்திற்கு வருபவர்கள் தற்காலிக மற்றும் நிரந்தரக் கண்காட்சிகளையும் காணலாம். இதில் சிங்கப்பூரில் புலாவ் உபின், எம்பிரஸ் பிளேஸ், கம்போங் கிளாம் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளிலிருந்து மீட்கப்பட்ட கலைப்பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

