நாட்டின் வடக்குப் பகுதியில் வசிக்கும் இளையர்கள் ஒன்றுகூடி நட்பை வளர்த்துக்கொள்ளவும், கலை, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவும் ‘சாப் கம்யூனிட்டி’ என்ற புதிய சமூக மையம் ஈசூனில் திறக்கப்பட்டுள்ளது.
ஈசூன் அவென்யூ 6ல் உள்ள புளோக் 287ன் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள மையத்தை, நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான மூத்த அமைச்சர் கா. சண்முகம், கலாசார, சமூக, இளையர்துறை, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்களின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹான் யான் ஆகியோர் சனிக்கிழமை (அக்டோபர் 10) அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
15 முதல் 35 வயதுடைய இளைஞர்களுக்காக இலவசமாக இயங்கும் அந்த மையத்தில் ஒரே நேரத்தில் 70 பேர் வரை கூடி மகிழலாம். 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ‘எஸ்ஜி இளையர் திட்டத்தின்கீழ்’ (SG Youth Plan) அறிமுகப்படுத்தப்பட்ட 12 புதிய ‘மூன்றாம் இடங்களில்’ இதுவும் ஒன்று.
இளைஞர்களிடையே தனிமை உணர்வைக் குறைக்கவும், சமூக உறவுகளை வலுப்படுத்தவும் இம்மையம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘கிரேட்டர் இம்பேக்ட்’ சமூக நிறுவனத்தால் நடத்தப்படும் இம்மையம், இவ்வாண்டு ஜனவரி முதல் இயங்கி வருகிறது.
இங்கு பாடுதல், பலகை விளையாட்டுகள், ஓவியப் பயிற்சி, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இளையரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், 16 வயதுச் சிறுவன் ஒருவனின் பரிந்துரையின்பேரில் காபி, ‘மாட்சா’ அருந்தும் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் பல சவால்களைச் சந்திக்கும் இளையர்களுக்கு இதுபோன்ற மையங்கள் உறுதுணையாகவும், அவர்களுக்கு ஒரு நல்ல பிணைப்பையும் ஏற்படுத்தித் தரும் என்று தொடக்க விழாவில் பேசிய திருமதி கோ ஹான் யான் குறிப்பிட்டார்.
