தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசு நீதிமன்றங்களுக்குப் புதிய முதன்மை நீதிபதி

2 mins read
3fab795b-1acb-4662-95d9-4b2d0930de5f
அரசு நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதிப் பொறுப்பை நீதிபதி வின்சென்ட் ஹூங் செங் லெயிடமிருந்து நீதிபதி கிறிஸ்டஃபர் டான் ஃபெங் வீ (இடம்) ஏற்பார். - படம்: சிங்கப்பூர் நீதிமன்றங்கள்

அரசு நீதிமன்றங்களின் புதிய முதன்மை நீதிபதியாக நீதிபதி கிறிஸ்டஃபர் டான் ஃபெங் வீயை அதிபர் தர்மன் சண்முகரத்னம் நியமித்திருக்கிறார். நீதிபதி வின்சென்ட் ஹூங் செங் லெயிடமிருந்து அடுத்த ஆண்டு (2026) ஜனவரி முதல் தேதி நீதிபதி டான் அந்தப் பொறுப்பை ஏற்பார்.

அரசு நீதிமன்றங்களின் நிர்வாக, தலைமைத்துவத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் நீதிபதி டான் வகிப்பார் என்று சிங்கப்பூர் நீதிமன்றங்கள் புதன்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

நீதிபதி ஹூங் அரசு நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதியாகவும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் 2020 ஏப்ரல் முதல் தேதி பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

நீதிபதி ஹூங் அரசு நீதிமன்றங்களை மிகவும் சிறந்த முறையில் வழிநடத்தியதாகத் தலைமை நீதிபதி சுந்தரே‌‌ஷ் மேனன் பாராட்டினார்.

“நீதிபதி ஹூங் பெருந்தொற்றுக் காலத்தில் அரசு நீதிமன்றங்கள் நிலைத்தன்மையுடன் செயல்படுவதை உறுதிசெய்தார்.

“வழக்குகள் குவிவதைத் தடுத்ததோடு விரைவாக அவற்றைக் குறைக்கவும் அவர் முயற்சி எடுத்தார்,” என்றார் தலைமை நீதிபதி மேனன்.

அத்துடன் நீதிபதி ஹூங் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை உற்சாகத்தோடு முன்னெடுத்ததாகவும் குடிமக்களுக்கு நீதி கிடைக்கும் வழிகளை உறுதிசெய்ய உன்னத முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் சொன்னார்.

அரசு நீதிமன்றங்கள், நீதிபதி டானுடைய தலைமைத்துவத்தின்கீழ் தரமான தீர்ப்புகள், சச்சரவுகளுக்கு முறையான தீர்வுகள், புத்தாக்கச் சேவைகள் ஆகியவற்றின் மூலம் நீதி கிடைக்கும் வழிகளைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்று தலைமை நீதிபதி மேனன் நம்பிக்கை தெரிவித்தார்.

நீதிபதி டான் 2023ல் நீதி ஆணையராக நியமிக்கப்பட்டார். 2020 மேயிலிருந்து அரசு நீதிமன்றங்களின் பதிவாளராகவும் 2022 ஜூனிலிருந்து அரசு நீதிமன்றங்களின் துணை முதன்மை நீதிபதியாகவும் அவர் பதவி வகித்து வருகிறார். அவர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக ஆகஸ்ட் முதல் தேதி நியமிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்