சிங்கப்பூர் ராணுவத்தின் புதிய தலைவராகப் பிரிகேடியர் ஜெனரல் காய் டெக்சியன், 40, பொறுப்பேற்றார்.
பாசிர் லபா முகாமில் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) மாலை நடைபெற்ற ராணுவப் படையின் தலைமைத்துவ மாற்றத்தைக் குறிக்கும் அணிவகுப்பில் பிரிகேடியர் ஜெனரல் காய்யிடம் தலைமைப் பொறுப்பை மேஜர் ஜெனரல் டேவிட் நியோ ஒப்படைத்தார்.
பிரிகேடியர் ஜெனரல் காய், 2003ல் சிங்கப்பூர் ஆயுதப்படையில் சேர்ந்தார். தற்காப்பு அமைச்சிலும் சிங்கப்பூர் ஆயுதப்படையிலும் பல்வேறு உயர் பதவிகளை அவர் வகித்துள்ளார்.
48வது சிங்கப்பூர் கவச வாகனப் பட்டாளத் தலைவர், 8வது சிங்கப்பூர் கவச வாகனப் பெரும்படையின் தலைவர், கூட்டுத் திட்டம், உருமாற்றத் துறையின் தலைவர் போன்ற பதவிகள் அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூர் ஆயுதப்படையின் பல்வேறு திறன் மேம்பாட்டு, உருமாற்ற முயற்சிகளை பிரிகேடியர் ஜெனரல் காய் வழிநடத்தியுள்ளார் என்று தற்காப்பு அமைச்சு கூறியது. மின்னிலக்க, உளவுச் சேவைப் பிரிவை நிறுவியது, சிங்கப்பூர் ஆயுதப்படை 2040க்கான நீண்டகாலத் திட்டத்தை உருவாக்கியது போன்ற நடவடிக்கைகளை அது சுட்டியது.
கடந்த 2012ல் அவர் ஆப்கானிஸ்தானில் பணியாற்றுவதற்காக அனுப்பப்பட்டதாகவும் அங்கு நடைபெற்ற அனைத்துலக மறுகட்டுமானத் திட்டங்களுக்குச் சிங்கப்பூர் ஆயுதப்படையின் பங்களிப்பின் ஓர் அங்கமாக இந்த ஏற்பாடு அமைந்ததாகவும் தற்காப்பு அமைச்சு கூறியது.
இதற்கிடையே, மேஜர் ஜெனரல் நியோ, 2022 மார்ச் முதல், சிங்கப்பூர் ராணுவத்தின் தலைவராக செயலாற்றி வந்துள்ளார்.
அவரது தலைமைத்துவத்தின்கீழ் சிங்கப்பூர் ராணுவம் உயரிய செயல்திறன் தயார்நிலையைக் கட்டிக்காத்து வந்ததாக தற்காப்பு அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் ஆயுதப்படையில் தொடரும் தலைமைத்துவப் புதுப்பிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த மாற்றம் அமைந்துள்ளதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

