‘விஷன்பவர் பகுதி மின்கடத்தி தயாரிப்பு நிறுவனம்’ (விஎஸ்எம்சி) சிங்கப்பூரில் தனது முதலாவது ஆலையைத் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) திறந்தது.
தைவானின் வேன்கார்டு அனைத்துலகப் பகுதி மின்கடத்தி நிறுவனமும் (விஐஎஸ்) நெதர்லாந்தின் என்எக்ஸ்பி பகுதி மின்கடத்தி நிறுவனமும் இணைந்து 7.8 பில்லியன் அமெரிக்க டாலர் (S$10.5 பில்லியன்) மதிப்பில் அதனை அமைத்துள்ளன.
தெம்பனிசில் அமைந்துள்ள அந்த ஆலைமூலம் 1,600 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆலை வரும் 2029ஆம் ஆண்டிற்குள் தனது முழு உற்பத்தித்திறனை எட்டும்போது மாதத்திற்கு 44,000 கணினிச் சில்லுகளைத் தயாரிக்கும்.
அடுத்த தலைமைத் திறன்கருவிகள், நிகழ்வுலகச் செயற்கை நுண்ணறிவு (பிசிக்கல் ஏஐ) அமைப்புகளுக்குத் தேவையான புத்தாக்கத் தொழில்நுட்பங்களை இந்த ஆலை வழங்கும் என்று என்எக்ஸ்பி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரஃபாயர் சோட்டோமேயர் தெரிவித்தார்.
பகுதி மின்கடத்தித் துறையில் போதிய உள்ளூர்த் திறனாளர்களை உருவாக்க உதவும் வகையில், உள்ளகப் பயிற்சி, நிபுணத்துவப் பயிற்சித் திட்டங்கள் போன்ற வழிகளில் சிங்கப்பூரின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுடன் உடன்பாடுகள் செய்துகொண்டுள்ளதாக விஎஸ்எம்சி நிறுவனம் தெரிவித்தது.
தொழில்துறை பற்றியும் அதிலுள்ள பலதரப்பட்ட வேலைகள் பற்றியும் மாணவர்கள் நன்கு புரிந்துகொள்ள அந்தப் பங்காளித்துவங்கள் உதவும் என்று வர்த்தக, தொழில் (எரிசக்தி, தொழில்துறை) அமைச்சர் டான் சீ லெங் குறிப்பிட்டார்.
பகுதி மின்கடத்தித் துறையில் நல்ல, அர்ததமுள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்த இத்தகைய பங்காளித்துவங்களும் மனிதவள அமைச்சு மற்றும் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் திட்டங்களும் உதவும் என்று வர்த்தக, தொழில்துறை அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.
இதனிடையே, சில்லுகளுக்கான தேவை அதிகரித்துவருவதால் சிங்கப்பூரில் இரண்டாவது ஆலையை அமைப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக விஎஸ்எம்சி தலைவர் லியூ ஃபாங் கூறினார்.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பகுதி மின்கடத்தித் துறையின் பங்கு ஆறு விழுக்காடு என்றும் அதில் 35,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர் என்றும் பொருளியல் வளர்ச்சிக் கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
