தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகத்தில் துடிப்புடன் பங்காற்ற புதிய குடிமக்களுக்கு பிரதமர் வோங் அழைப்பு

3 mins read
0b9e38b6-6004-4ca1-85bd-554d1a18efc3
தேசிய குடியுரிமைச் சடங்கில் பங்கேற்று பிரதமர் லாரன்ஸ் வோங் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் புதிய குடிமக்கள் நாட்டிற்குப் பங்களிக்கும் வழிகளைத் தெரிந்துகொள்ள சமூகத்தில் துடிப்புடன் பங்காற்ற வேண்டும் என பிரதமர் லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர்கள் தங்களது அக்கம்பக்க வீட்டாரைப் பற்றித் தெரிந்துகொள்வதுடன் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதும் அவசியம் என்றார் அவர்.

“சமூக நிகழ்வுகளில் துடிப்புடன் பங்கேற்பதன் மூலம் சிங்கப்பூர் குடிமக்கள் என்ற நற்பெயருடன் நின்றுவிடாமல், உணர்வுபூர்வமாகவும் உளபூர்வமாகவும் மக்களுடன் அவர்கள் இணைய முடியும்,” என்றார் பிரதமர்.

சமூகத்திற்குப் பங்களிப்பது குறித்து அதிகம் தெரிந்துகொள்ள விரும்பும் புதிய குடிமக்கள், அந்தந்த சமூகத் தலைவர்களையும் அடித்தளத் தலைவர்களையும் அணுகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூர்க் குடிமகன் ஆவது என்பது சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் நன்பண்புகளுக்குக் கடப்பாடு கொள்வதாகும். பல்வேறு பண்பாடுகளை அடையாளம் காண்பது அவற்றில் முக்கிய பண்பு ஆகும். 

“மேலும், வெவ்வேறு இனங்கள், சமயங்கள், பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் மக்களைக் கொண்ட நாடு இது என்பதைத் தெரிந்துகொள்வதும் அதில் அடங்கும்.

“வேற்றுமைகள் நம்மைப் பிளவுபடுத்த அனுமதிக்காமல், பன்முகத்தன்மையை நமது பலமாக ஏற்றுக்கொள்வது என்பதே நமது தேர்வாக அமைந்துள்ளது, என்றார் திரு வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.

அவர், தொழில்நுட்பக் கல்விக்கழக மேற்கு கல்லூரி நிகழ்வரங்கில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற தேசிய குடியுரிமை சடங்கில் பங்கேற்றுப் பேசினார். 

மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ 300 புதிய சிங்கப்பூரர்கள் அதில் கலந்துகொண்டனர். அவர்கள் தங்களது குடியுரிமைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டதோடு, நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடப்பாட்டுக்கான பற்றுறுதியை எடுத்துக்கொண்டனர்.

எல்லாரும் பகிர்ந்துகொள்ளும் வருங்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்க சக சிங்கப்பூரர்களுடன் கைகோத்துப் பணியாற்றவும் அவர்கள் உறுதிபூண்டனர்.

தேசிய ஒருமைப்பாட்டு மன்றத்தின் ஆதரவுடன் மக்கள் கழகம் அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பிரதமரின் மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதியின் இதர எம்.பி.க்களான மூத்த தற்காப்புத் துணை அமைச்சர் ஸாக்கி முஹம்மது, வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் அலெக்ஸ் யாம், திருவாட்டி ஹானி சோ ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

குடியுரிமையின் மாண்பைப் பறைசாற்ற கடந்த 2007ஆம் ஆண்டு தேசிய குடியுரிமைச் சடங்கு அறிமுகம் கண்டது.

புதிய குடிமக்கள் சார்ந்திருக்கும் தொகுதியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்விலோ அல்லது குழுத்தொகுதி மட்டத்தில் நடத்தப்படும் நிகழ்விலோ அவர்கள் பங்கேற்று தங்களுக்கான குடியுரிமைச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 22,000 புதிய குடிமக்கள் இணைகிறார்கள்.

புதிய குடிமக்களில் சிங்கப்பூர் சமூகத்துக்குப் பங்களித்த இருவரை பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார்.

அவர்களில் ஒருவர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் யே டுட் லின், மற்றவர் பதிவுபெற்ற தாதி இங் ஜீ நி. 

ஆறு வயதில் மியன்மாரில் இருந்து சிங்கப்பூர் வந்த திரு லின், 2011ஆம் ஆண்டு நிரந்தரவாசம் பெற்றார். தற்போது அவருக்கு 24 வயது.

அதேபோல மலேசியக் குடிமகளான திருவாட்டி இங் 2011ஆம் ஆண்டு தாதிமைப் பட்டயப் படிப்புக்காக சிங்கப்பூர் வந்தார்.

தற்போது 34 வயதாகும் அந்தப் பெண், கொவிட்-19 பெருந்தொற்றை சிங்கப்பூர் சமாளித்த விதத்தால் ஈர்க்கப்பட்டு இங்கேயே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடிவெடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்