தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஸ்பாஞ்பாப் ஸ்குவேர்பேண்ட்ஸ்’ ஓவியங்களைக் கொண்ட புதிய ‘கிளீன்போட்’

3 mins read
8fadd42d-9905-41d4-ae92-cd4cd3915c89
ஸ்குவேர்பேண்ட்ஸ் ஓவியங்களைக் கொண்ட புதிய ‘கிளீன்போட்’ கூடம் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் திறக்கப்பட்டுள்ளது. - படம்: பொதுச் சுகாதார மன்றம்
multi-img1 of 2

சமூகத்தில் நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கத்துடன், புகழ்பெற்ற கேலிச்சித்திரக் கதாபாத்திரமான ஸ்பாஞ்பாப் ஸ்குவேர்பேண்ட்ஸ் ஓவியங்களைக் கொண்ட புதிய ‘கிளீன்போட்’ கூடத்தைப் பொதுச் சுகாதார மன்றம் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் திறந்து வைத்துள்ளது.

உலகத் துப்புரவு தினத்துடன் (World Cleanup Day) இணங்கும் வகையில் திறப்புவிழா நிகழ்ச்சி சனிக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்றது.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்ட அமைச்சர் எட்வின் டோங்கும் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினே‌ஷ் வாசு தாசும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி, சிங்கப்பூரின் அறிவுசார் சொத்து சார்ந்த முதல் சுற்றுச்சூழல் முயற்சியாகும்.

சட்ட அமைச்சர் எட்வின் டோங்கும் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினே‌ஷ் வாசு தாசும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய ‘கிளீன்போட்’ கூடத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
சட்ட அமைச்சர் எட்வின் டோங்கும் கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினே‌ஷ் வாசு தாசும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய ‘கிளீன்போட்’ கூடத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர். - படம்: பொதுச் சுகாதார மன்றம்

உலகம் முழுவதும் புகழ்பெற்ற கேலிச்சித்திரக் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தி, பொது இடங்களில் குப்பை பொறுக்கும் நடவடிக்கையைப் பொதுச் சுகாதார மன்றம் அனைத்து வயதினருக்கும் வேடிக்கையான, ஈடுபாடுமிக்க, எளிதில் அணுகக்கூடிய ஒன்றாக மாற்ற எண்ணம் கொண்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் மொத்தம் 25 ‘கிளீன்போட்’கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்பாஞ்பாப் ‘கிளீன்போட்’, ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியின் எட்டுத் தூண்களைக் கொண்ட ‘கிழக்குப் பகுதி, சிறந்த பகுதி’ (East Side, Best Side) என்ற திட்டத்தில், ‘பாதுகாக்க வேண்டிய இடம்’ (A Place to Conserve) என்ற தூணுக்கு ஆதரவு அளிக்கிறது.

ஈஸ்ட் கோஸ்ட் லகூன் உணவுக் கிராமம் (East Coast Lagoon Food Village) அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த ‘கிளீன்போட்’, சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருக்க அனைவரும் பயன்படுத்தக்கூடிய சமூக வளமாகும். குப்பை சேகரிக்கும் கருவிகளை எளிதில் பெறுவதற்கான வசதியை இது வழங்குகிறது.

குடும்பங்களையும், பூங்காவுக்கு வரும் சிறுவர்களையும் மேற்கூறிய நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதோடு, நிலைத்தன்மை மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்க முடியும் என்பதை நினைவூட்டுவதே இதன் நோக்கம் ஆகும்.

சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருப்பது அரசு அமைப்புகள் அல்லது துப்புரவுப் பணியாளர்களின் பொறுப்பு மட்டுமன்று என்றும் ஒவ்வொருவரும் அதனைத் தங்களது கடமையாகக் கருதி தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அமைச்சர் டோங் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் உரையாற்றினார். - படம்: பொதுச் சுகாதார மன்றம்

மேலும், ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அதன் தனித்துவமான கடற்கரை அமைப்பின் காரணமாக பருவநிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது என்பதால் பாதுகாப்பு முயற்சிகள் மிக அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“ஈஸ்ட் கோஸ்ட் பாதுகாக்க வேண்டிய ஓர் இடம். நாம் நம் வீடு என்று அழைக்கும் ஓர் இடம். மேலும், சிங்கப்பூருக்குச் சொந்தமானது என்று நாம் அனைவரும் பெருமையுடன் கூறக்கூடிய ஓர் இடம் என நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.

கடல், கடலோரச் சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில், குறிப்பாக இளைய தலைமுறையினரை ஈடுபடுத்துவதற்கான புதுமையான வழியாக ஸ்பாஞ்பாப் ஸ்குவேர்பேண்ட்ஸ் கிளீன்போட் திகழ்கிறது என்று திரு தினேஷ் குறிப்பிட்டார்.

“நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தை மேலும் பசுமையாக்கவும் ஒவ்வொரு சிறிய செயலாலும் நீடித்த மாற்றத்தை உருவாக்கவும் முடியும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ‘கிண்ட்ரெட் கம்யூனிட்டி’ (Kindred Community) தலைமையில் கிட்டத்தட்ட 200 தன்னார்வலர்கள் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது ‘தி கிரேட் ஓஷன் டேஷ்’ ஓட்டப்பந்தயத்தின் ‘ஒரே இயக்கத்தின்மூலம் சேகரிக்கப்பட்ட அதிகப்படியான கடல் குப்பைகள்’ என்ற சிங்கப்பூர்ச் சாதனை முயற்சிக்கும் துணைபுரிந்தது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ‘கிண்ட்ரெட் கம்யூனிட்டி’ (Kindred Community) தலைமையில் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 200 தன்னார்வலர்களும் முக்கிய அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ‘கிண்ட்ரெட் கம்யூனிட்டி’ (Kindred Community) தலைமையில் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 200 தன்னார்வலர்களும் முக்கிய அதிகாரிகளும் ஈடுபட்டனர். - படம்: பொதுச் சுகாதார மன்றம்

மேலும், பொதுச் சுகாதார மன்றத்துடனான பங்காளித்துவத்தின்வழி ‘ஒரு கிலோவிற்கு ஒரு வெள்ளி’ திட்டத்தின்கீழ் திரட்டப்பட்ட நிதி, தேசியப் பூங்காக் கழகத்தின் ‘100கே கோரல்ஸ்’ (100K Corals) திட்டத்திற்கு ஆதரவளிக்கும். இவை முறையே 2034க்குள் 100,000 பவளப்பாறைகளை நடும் பத்தாண்டுத் திட்டத்தை வலுப்படுத்தும்.

“ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா ஆண்டு முழுவதும் அதிகமானோர் வருகைதரும் இடமாகும். அவர்கள் இங்கு வந்து சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபடும்போது, இந்தப் பூங்காவை மட்டுமல்லாது சிங்கப்பூரின் பிற பூங்காக்களையும் கடற்கரைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கின்றனர்.

“இந்தப் புதிய ‘கிளீன்போட்’ முன்முயற்சியின் மூலம், இளவயதிலிருந்தே சிங்கப்பூரின் பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்கும் பழக்கத்தை உருவாக்கலாம் என்று நம்புகிறோம்,” என்று தேசியப் பூங்காக் கழக இயக்குநர் நந்தினி இளங்கோவன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்