ரோச்சோர் வட்டாரத்தில் சிங்கப்பூரில் இஸ்லாமியக் கல்விக்காகப் புதிய கல்லூரியின் வளாகம் அமையும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது இரண்டாவது தேசிய தினப் பேரணி உரையின்போது அறிவித்தார்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அருகே அது அமைக்கப்படும் எனக் கூறிய அவர், இரு கல்லூரிகளும் ஒரே வளாகத்தில் இயங்கினாலும் அவை தனித்தனியாகச் சொந்தக் கட்டடங்களில் செயல்படும் என்றார்.
கடந்த ஆண்டு தேசிய தினப் பேரணி உரையின்போது, இஸ்லாமியக் கல்விக்காகப் புதிய கல்லூரி அமைப்பது தொடர்பான அறிவிப்பைப் பிரதமர் வோங் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றமான முயிஸ், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பங்காளிகளுடன் இணைந்து புதிய கல்லூரியின் பாடத்திட்டங்களை வகுத்தன.
இஸ்லாமிய கல்விக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தையும் தங்கள் கல்வியில் ஓர் பகுதியாகப் படிக்க முடியும் எனப் பிரதமர் வோங் இவ்வாண்டு தேசிய தினப் பேரணி உரையில் கூறினார்.
“இரு நிலையங்களும் வசதிகளைப் பகிர்ந்துகொள்ளும். இதன்மூலம், இரு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ள முடியும். இது அவர்களின் கல்லூரி வாழ்க்கையை வளப்படுத்தும்,” எனப் பிரதமர் குறிப்பிட்டார்.
இஸ்லாமியக் கல்வியை இக்கால கல்வி வளங்களுடன் இணைத்து ஒருங்கிணைந்த கற்றல் அனுபவத்தை இஸ்லாமியக் கல்விக் கல்லூரி வழங்க முனைகிறது. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்துடன் உத்திபூர்வ பங்காளித்துவத்தை புதிய இஸ்லாமியக் கல்லூரி மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக, மாணவர்கள் சமூகத்திற்குச் சிறப்பாகச் சேவையாற்றும் வகையில், அவர்களுக்கான கல்வி அறிவையும் நடைமுறைத் திறன்களையும் வளர்ப்பதற்குத் தகுந்தவாறு சமூக அறிவியல் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து வழங்குவதே அந்தப் பங்காளித்துவத்தின் நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தோடு உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களான எகிப்தின் இஸ்லாமிய ஆலோசனை மன்றம் ‘டார் அல் இஃப்தா’, ஜோர்தான் பல்கலைக்கழகம், மொரோக்கோவின் அல் கராவியின் ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நாலாண்டு முழுநேர பட்டக்கல்வியை அக்கல்லூரி வழங்கும்.
இஸ்லாமியக் கல்விக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை 2028ஆம் ஆண்டுமுதல் தொடங்கும். ரோச்சோரில் புதிய வளாகத்திற்கான பணிகள் நிறைவடையும் வரை, 51 பென்கூலன் ஸ்திரீட்டில் அக்கல்லூரி தற்காலிகமாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.