பொங்கோலின் மரபுடைமையைக் கொண்டாடும் புதிய சமூக அடிப்படையிலான கண்காட்சிகள், திட்டங்கள்

பொங்கோலின் மரபுடைமையைக் கொண்டாடும் புதிய சமூக அடிப்படையிலான கண்காட்சிகள், திட்டங்கள்

2 mins read
489627e7-974a-4324-ba7a-77fb96fc0ae6
‘Heritage Activation Node @ Punggol’ என்ற திட்டத்தின் தொடக்க நிகழ்வாக நடைபெறும் இரண்டு வார கால பொது வரவேற்பு நிகழ்வில், பொங்கோல் குடியிருப்பாளர்களின் வரலாறு, நினைவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையை 12 சமூகத் திட்டங்கள், கலைப் படைப்புகள், மரபுடைமை நடைப்பயணங்கள் ஆகியவற்றின் மூலம் காட்சிப்படுத்துகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொங்கோல் வட்டாரத்தில் சமூகப் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்காக, தேசிய மரபுடைமைக் கழகம் மற்றும் ‘OH! Open House’ என்ற கலை அமைப்பும் இணைந்து 2025ஆம் ஆண்டில் ‘Heritage Activation Node @ Punggol’ என்ற திட்டத்தைத் தொடங்கின.

இதன் தொடக்க நிகழ்வாக நடைபெறும் இரண்டு வார கால பொது வரவேற்பு நிகழ்வில், பொங்கோல் குடியிருப்பாளர்களின் வரலாறு, நினைவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையை 12 சமூகத் திட்டங்கள், கலைப் படைப்புகள், மரபுடைமை நடைப்பயணங்கள் ஆகியவற்றின் மூலம் காட்சிப்படுத்துகின்றன. இந்த நிகழ்வுகள் வாட்டர்வே பாயிண்ட் மற்றும் அதன் அருகிலுள்ள பொது இடங்களில் நடைபெறுகின்றன.

“வாழ்க்கையின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், அதாவது பொங்கோலில் வசிப்பவர்கள், அங்கு செல்பவர்கள் அல்லது அவ்வட்டாரத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் கதைகள், மரபுடைமை மற்றும் குடும்ப வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளவும் தொண்டூழியர்களாகப் பங்கெடுக்கவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது,” என்று புதன்கிழமை (மார்ச் 12) நடைபெற்ற ஊடக முன்னோட்டத்தின்போது தேசிய மரபுடைமைக் கழகத்தின் கல்வி மற்றும் சமூகப் பரப்புரை இயக்குநர் ஜெரால்ட் வீ கூறினார்.

இது சமூகங்களுக்கு இடையிலான தொடர்பை வளர்ப்பதற்கும், பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் ‘பொங்கோல் அக்கம்பக்கக் கதைப்புத்தகம்’ ஆகும். வாய்மொழி வரலாற்று நேர்காணல்கள் மற்றும் ஆவணக் காப்பக ஆராய்ச்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 10 சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அனைத்து வயதினரும் பொங்கோலின் தற்கால இடங்களில் மரபுடைமையைக் கண்டறிய ஊக்குவிக்கும் செயல்பாடுகளும் இதில் உள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் இந்தப் புத்தகத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

“மக்களின் செயல்பாடுகள் எவ்வாறு இந்தப் பகுதியை வடிவமைத்து மாற்றியுள்ளன என்பதில் இந்தப் புத்தகம் கவனம் செலுத்துகிறது,” என்று ‘OH! Open House’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆலன் ஊய் கூறினார்.

“இன்று பொங்கோலில் பல நவீன உள்கட்டமைப்புகள் உள்ளன. ஆனால், இது வளமான மரபுடைமை உள்ள பகுதி. இங்குள்ள சமூகம் தனது வேர்களைப் பலப்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் தேசிய மரபுடைமைக் கழகம் விடுத்த முதல் பொது அழைப்பின் மூலம் பெறப்பட்ட 30 முன்மொழிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சமூகத் திட்டங்களும் இங்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் பொங்கோலின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த மெய்நிகர் கலைப் பட்டறையும் அடங்கும்.

HAN@Punggol திட்டத்திற்கான இரண்டாவது பொது அழைப்பு மார்ச் 14ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை திறந்திருக்கும். கூடுதல் விவரங்களுக்கு ஆர்வம் உள்ள சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் கு http://go.gov.sg/han-cfc என்ற இணையப்பக்கத்துக்குச் செல்லலாம்.

பொது வரவேற்புத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளவும் முன்பதிவு செய்யவும் https://www.roots.gov.sg/han/Neighborhoods/Punggol என்ற இணையப்பக்கத்துக்குச் செல்லலாம்.

குறிப்புச் சொற்கள்