புதிய சமூகத் திட்டம்; மூத்தோர் இலவசமாகச் சுகாதாரச் சாதனங்களைப் பயன்படுத்திப் பார்க்கலாம்

புதிய சமூகத் திட்டம்; மூத்தோர் இலவசமாகச் சுகாதாரச் சாதனங்களைப் பயன்படுத்திப் பார்க்கலாம்

2 mins read
a231ca8e-035b-46e0-bef8-550b63268608
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் கெல்வின் டான் (வலது), கம்போங் சாய் சீ குடியிருப்பாளர் எமிலி சூவிடம் இயந்திர மனிதனின் அம்சங்கள் குறித்து விளக்குகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கம்போங் சாய் சீ பகுதியைச் சேர்ந்த மூத்தோர், சுகாதாரச் சாதனங்களை வாங்குவதற்கு முன்னர், அவற்றை இரவல் பெற்றுத் தங்களின் வீடுகளில் பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பை விரைவில் பெறவுள்ளனர்.

‘ஹார்ட்பீட்@பிடோக்’கில் அமைந்துள்ள புதிய ‘கேர் டெக் கஃபே’இல், மூத்தோரும் அவர்களின் பராமரிப்பாளர்களும் அந்தப் பராமரிப்புத் தொழில்நுட்பச் சாதனங்களை நேரில்சென்று காணமுடியும்.

அந்தத் தற்காலிக இடம் ஓராண்டுக் காலம் செயல்படவுள்ளது. அதில், ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் திறன் கடிகாரங்கள், உடற்பயிற்சிகளுக்கு வழிகாட்டும் திறன் மோதிரங்கள், மெய்நிகர் முரசுச் செயலிகள், மருத்துவக் கைப்பிடிச் சாதனங்கள், ‘லோவோட்’ (LOVOT), ‘கெபி’ (Kebbi), ‘ஹியோடோல்’ (Hyodol) போன்ற செயற்கை நுண்ணறிவு இயந்திர மனிதர்கள் உள்ளிட்ட புத்தாக்கப் பொருள்கள் காட்சிப்படுத்தப்படும்.

அந்த இடம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) திறக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்குப் பிறகு கம்போங் சாய் சீ பகுதியில் வசிக்கும் மூத்தோரும் அவர்களின் பராமரிப்பாளர்களும் அச்சாதனங்களை இரவல் பெறலாம்.

$100 மதிப்புள்ள மருத்துவக் கைப்பிடிச் சாதனம், $10,000 மதிப்புள்ள இயந்திர மனிதன் எனப் பலதரப்பட்ட பொருள்களை, அவர்கள் தங்களது வீடுகளிலேயே ஒரு வாரத்திற்கு எந்தவொரு கட்டணமுமின்றி இலவசமாகப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி, கம்போங் சாய் சீ சமூக மன்றத்தின் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது திறக்கப்படும் அந்த 60 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ‘கஃபே’, ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2 மணிமுதல் மாலை 4 மணிவரை திறந்திருக்கும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மெதுவாகவே உள்ளது என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் கெல்வின் டான் கூறினார். அதிகமான முன்கட்டணங்கள், விழிப்புணர்வின்மை, நம்பிக்கை இல்லாமை ஆகியவை அதற்குப் பொதுவான காரணங்கள் என்றும் அத்திட்டத்தை முன்னெடுக்கும் திரு டான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்