குவீன்ஸ்வே, ஸ்டேக்மண்ட் ரிங்கில் ரயில் பசுமைப்பாதைக்கான புதிய சமூக இடங்கள்

2 mins read
8525eac7-92f6-48f1-bb3d-a224fe324923
ஒவ்வொரு சமூக முனையமும் பொதுமக்கள் கூடி, ஒன்றிணைந்து சில பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான இடமாகும். - படங்கள்: நிலப் போக்குவரத்து ஆணையம், நகர மறுசீரமைப்பு ஆணையம், நிக்கென் செக்கேய் நிறுவனம்

குவீன்ஸ்வே, போர்ட்ஸ்டௌன் அவென்யூ ஆகிய வட்டாரங்கள் சந்திக்கும் மேம்பாலச் சாலைக்கு அடியில் இருக்கும் பகுதி விரைவில் சமூகம் ஒன்றுகூடும் இடமாக மாறப்போகிறது.

இந்த இடத்தில் அமைக்கப்படும் ரயில் பசுமைப்பாதை சிங்கப்பூரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் சமூக முனையங்களில் ஒன்றாகும்.

குவீன்ஸ்வே முனையத்திற்கான கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டு நிறைவடையும் என நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 17) தெரிவித்தார்.

மேலும், மரபுடைமைக் காட்சிக்கூடம், அப்பகுதிக்கான தோட்டக்கலையின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்படும் தோட்டம் போன்றவை குவீன்ஸ்வே முனையத்தில் அமைக்கப்படும் என்றார் அவர்.

நகர மறுசீரமைப்பு ஆணைய நிலையத்தில் நடக்கும் ரயில் பசுமைப் பாதைகள் குறித்த கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இயூ டீ வட்டாரத்திற்கு அருகே இருக்கும் ஸ்டேக்மண்ட் ரிங் பகுதிக்கும் டௌன்டவுன் ரயில் பாதையில் புதிதாக அமைக்கப்படும் பெருவிரைவு ரயில் நிலையத்திற்கும் அருகில் சமூக முனையம் ஒன்று 2035ஆம் ஆண்டில் உருவாக்கப்படும் என்று அமைச்சர் சொன்னார்.

ரயிலிலிருந்து பாதை வரை (From Rail to Trail ) எனும் தலைப்பையொட்டி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கண்காட்சி, இயற்கைக்கும் மரபுடைமைக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இடையே இருக்கும் 14 ஆண்டுகாலப் பங்காளித்துவத்தை நினைவுபடுத்துகிறது.

சிங்கப்பூரில் முன்பு இருந்த கிரேத்தாப்பி தானா மலாயு (கேடிஎம்) ரயில் பாதையைப் பொதுமக்களுக்கான பசுமை இடமாக மாற்ற இந்தப் பங்காளித்துவம் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

பசுமைப்பாதையுடன் உருவாக்கப்படும் ஒவ்வொரு சமூக முனையமும் பொதுமக்கள் ஒன்றுகூடி, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான இடமாக உள்ளன. இதுவரை அத்தகைய நான்கு சமூக முனையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பழைய புக்கிட் தீமா ரயில் நிலையம், கிராஞ்சி, தீவு விரைவுச்சாலை மேம்பாலத்திற்குக் கீழ் உள்ள பகுதி, புவன விஸ்தா உள்ளிட்ட பகுதிகளில் சமூக முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புக்கிட் தீமா தீயணைப்பு நிலையம் முன்பிருந்த இடத்தில் ஐந்தாவது சமூக முனையம் 2025ஆம் ஆண்டு திறக்கப்படும்.

குவீன்ஸ்வே முனையம் பற்றியும் 2035ஆம் ஆண்டு உருவாக்கப்பட உள்ள ஸ்டேக்மண்ட் ரிங் முனையம் குறித்தும் முன்னாள் தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் எதிர்காலத்தில் வரப்போகும் சமூக முனையம் குறித்தும் பொதுமக்களின் கருத்துகளை நகர மறுசீரமைப்பு ஆணையம் நாடுகிறது.  

குறிப்புச் சொற்கள்