சிங்கப்பூரின் ஆகாய நடுவத்தின் சார்பில் நீடித்த நிலைத்தன்மையுள்ள விமான எரிபொருளைக் கொள்முதல் செய்து அதன் விநியோகத்தை நிர்வகிக்க புதிய நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நீடித்த நிலைத்தன்மை விமான எரிபொருள் நிறுவனத்தால் (எஸ்ஏஎஃப்கோ), பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் வரியின் மூலம் பசுமையான விமான எரிபொருள் வாங்கப்படும். அது வழக்கமாகப் பயன்படுத்தப்படும் விமான எரிபொருளுடன் கலக்கப்பட்டு சாங்கி விமான நிலையம், சிலேத்தார் விமான நிலையம் ஆகியவற்றில் உள்ள விமானங்களில் நிரப்பப்படும்.
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானங்களில் நீடித்த நிலைத்தன்மையுள்ள எரிபொருள் பயன்படுத்தப்படுவதை ஆதரிக்கும் வகையில் குறிப்பிட்ட வரித் தொகையைப் பயணிகளிடமிருந்து வசூலிக்க அனுமதிக்கும் மசோதாவை நாடாளுமன்றம் இரண்டு வாரங்களுக்கு முன் நிறைவேற்றியது.
2026ஆம் ஆண்டுக்குள் சாங்கி விமான நிலையம், சிலேத்தார் விமான நிலையம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் விமான எரிபொருளில் ஒரு விழுக்காடு பசுமை எரிபொருளாக இருக்கவேண்டும் என்பது இலக்கு. 2030ஆம் ஆண்டுக்குள் அதனை 3லிருந்து 5 விழுக்காட்டுக்கு உயர்த்துவது திட்டம்.
நீடித்த நிலைத்தன்மையுள்ள விமான எரிபொருள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் போன்ற கழிவுப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டிலிருந்து சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் நீடித்த நிலைத்தன்மையுள்ள விமான எரிபொருளுக்கான வரியைச் செலுத்துவர். அதைக் கொண்டு எஸ்ஏஎஃப்கோ தனது இலக்கை அடைவதற்கான பசுமை எரிபொருளை வாங்கிக்கொள்ளும்.
பேங்காக் போன்ற குறுகிய தூர விமானங்களில் பயணம் செய்யும் சாதாரண வகுப்பு பயணிகள் $3 வரை வரி செலுத்தக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது.
தோக்கியோ வரையிலான தூரமான விமானப் பயணங்களுக்கு $6 வரியும் லண்டன் வரையிலான நீண்ட தூர விமானப் பயணங்களுக்கு $16 வரியும் பயணிகள் செலுத்தக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு இறுதிக்குள் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் பயணிகளுக்கான உறுதிபடுத்தப்பட்ட தொகையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானம் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறது என்பதையும் எந்த வகுப்பில் பயணிகள் பயணம் செய்கின்றனர் என்பதையும் பொறுத்து வரி வசூலிக்கப்படும்.

