புதிய 21.5 கி.மீ. வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தட (NSC) கட்டுமானப் பணிகள் மிகவும் சிக்கலான பொறியியல் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நொவினா, தாம்சன் ஆகிய பகுதிகளில் உருவாகியுள்ள எதிர்பாராத நிலத்தடிச் சூழல்களால் பணிகள் மேலும் சிக்கலடைந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
நொவினாவில், நிலத்தடியைத் தோண்டும் குழுவினர் சீரான, மென்மையான களிமண் தன்மையை எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக, கடினமான பாறைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களை அவர்கள் எதிர்கொண்டனர்.
அதனால் கட்டுமான முறையில் மாற்றம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
தாம்சன் பகுதியில் கடினமான பாறை அடுக்கு எதிர்பார்த்ததைவிட மேற்பரப்புக்கு அருகிலேயே அமைந்திருந்ததுடன், பெரிய பாறைத் துண்டுகளும் காணப்பட்டன.
கூடுதல் பணிகள் தேவைப்பட்டதால் கட்டுமானப் பணிகளின் வேகத்தை அது குறைத்தது.
அகழ்வாராய்ச்சியின் போது இத்தகைய நிலைமைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டதாகக் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) செய்தியாளர்களிடம் ஆணையம் தெரிவித்தது.
செயல்பாட்டில் உள்ள ரயில் பாதைகள், முக்கியச் சாலைகள், பயனீட்டு இணைப்புகள் மற்றும் அடர்த்தியாகக் கட்டப்பட்ட பகுதிகளுக்கு அருகில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நிலத்தின் தன்மையும் கட்டுமானச் சிக்கலை அதிகரிக்கும் சவால்களில் ஒன்றாக உள்ளது.
இத்தகைய பொறியியல் சவால்கள் புதிய போக்குவரத்து வழித்தட கட்டுமானப் பணிகளை முடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துமா என்று கேட்டதற்கு, பணிகளின் முன்னேற்றத்தை ஆணையம் கண்காணித்து வருவதாக அதன் பேச்சாளர் கூறினார்.
நொவினா வட்டாரத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள வடக்கு-தெற்கு எம்ஆர்டி வழித்தடத்திற்கு நேர் மேலேயும் கீழேயும் சுரங்கச்சாலை அமைக்கப்பட்டு வருவதால், அங்குள்ள சவால்கள் குறித்து செய்தியாளர்களிடம் ஆணையத்தின் அதிகாரிகள் விரிவாக விளக்கினர்.
வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் 2027ஆம் ஆண்டு முதல் கட்டம் கட்டமாகத் தயாராகும் என்று இதற்கு முன்னர் ஆணையம் அறிவித்திருந்தது.
அட்மிரல்டி வெஸ்ட் முதல் லெண்டார் அவென்யூ வரையிலான வடக்கு மேம்பாலம் மற்றும் லெண்டார் அவென்யூ முதல் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே வரையிலான சாலை சுரங்கச்சாலை ஆகியன 2029ஆம் ஆண்டு தயாராகும் என்றும் அது தெரிவித்திருந்தது.

