தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செந்தோசாத் தீவில் குளிர்ச்சி அளிக்கும் புதிய திட்டம்

4 mins read
97455e39-c922-4734-91a4-a90ba30a0095
செந்தோசாத் தீவில் அமைந்திருக்கும் சிலோசோ கடற்கரை. - படம்: சாவ்பாவ்

செந்தோசா மேம்பாட்டுக் கழகம் (எஸ்டிசி), செந்தோசாத் தீவு முழுவதற்குமான ‘கூலிங் செந்தோசா ரோட்மேப்’ என்ற விரிவான வெப்பக் குறைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம், செந்தோசாவிற்கு வரும் பொதுமக்களின் வெளிப்புற அனுபவத்தைச் சீராக்குவதோடு, நீடித்த பருவநிலைத் தீர்வுகளை முன்வைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நகர்ப்புற வெப்பநிலை உயர்வையும் (urban temperatures) வெப்ப அழுத்தம் குறித்த அதிகரித்துவரும் விழிப்புணர்வையும் மையமாகக் கொண்டு புதுமையான குளிரூட்டும் முறைகளை முன்வைக்கும் இத்திட்டம், இந்த வாரம் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.

‘செந்தோசா கூலிங் நெட்வொர்க்’

இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக ‘செந்தோசா கூலிங் நெட்வொர்க்’ எனப்படும் செந்தோசா குளிரூட்டும் கட்டமைப்பு அமைந்துள்ளது. இது, வெப்பத்திலிருந்து விடுபட்டு ஓய்வெடுக்கக்கூடிய இடங்களையும், விரிவான குளிர்ச்சி மண்டலங்களையும் உருவாக்குவதை உள்ளடக்கியது.

உள்ளரங்கில் கணக்கிடப்படும் வெப்பநிலைக் (Physiological Equivalent Temperature) குறியீட்டை, குறைந்தது 4 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கக்கூடிய தலையீடுகளின் மூலம், தீவு முழுவதும் நிழல் தரும் ஓய்வு மண்டலங்கள், காற்றோட்டத் தடங்கள், குளிர்ச்சியான நீர்த்தெளிப்பான்கள், இயற்கை அடிப்படையிலான குளிரூட்டும் இடங்கள் போன்றவை அமைக்கப்படவுள்ளன.

இத்திட்டம் மூன்று முக்கியத் தூண்களை மையமாகக் கொண்டுள்ளது. முதலாவது, பொதுமக்களின் தேவைகளையும் அனுபவங்களையும் முன்னிலைப்படுத்துதல். இரண்டாவது, வடிவமைப்பு, தொழில்நுட்பம், இயற்கை ஆகியவற்றின் ஒத்திசைவை உறுதி செய்தல். மூன்றாவது, தீவு முழுவதும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஊக்குவித்தல்.

“முழுத் தீவிலும் வெப்பத்தால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்னெடுக்க விரும்புகிறோம். ஆழமாகச் சிந்தித்து, விரைவாகச் செயல்படுவதன்மூலம் பொதுமக்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாமல் தங்கள் நேரத்தை இனிதே செலவிடுவதை உறுதிசெய்யலாம்,” என்று எஸ்டிசியின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கல் மா தெரிவித்தார்.

வெளிப்புற வெப்ப வசதி பற்றிய ஆய்வு

உலகளாவிய ஆலோசனை நிறுவனமான ‘அடெலியர் டென்’னுடன் இணைந்து, வெளிப்புறங்களில் ஒருவர் தனக்கு உகந்ததாக உணரும் வெப்பநிலை குறித்த விரிவான ஆய்வை எஸ்டிசி நடத்தியது.

செந்தோசாத் தீவின் அடிப்படை வெப்ப வரைபடம்.
செந்தோசாத் தீவின் அடிப்படை வெப்ப வரைபடம். - படம்: செந்தோசா மேம்பாட்டுக் கழகம்

கணினி மாதிரியமைப்புகளையும் தள அளவீடுகளையும் பயன்படுத்திய இந்த ஆய்வு, அடிப்படை வெப்ப வரைபடத்தை உருவாக்கி, இலக்குத் தலையீடுகள் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் கண்டது.

பசுமை, துளைகளுடன் கூடிய கட்டட வடிவமைப்பு, காற்றோட்டத் தடங்கள் ஆகியவை தீவை இயற்கையாகக் குளிர்விப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதை அதன் முடிவுகள் சுட்டிக்காட்டின. இதற்கேற்றவாறு, செந்தோசா சென்சரிஸ்கேப் போன்ற முக்கியச் சின்னங்கள், நிழற்பாதைகள், உயர்த்தப்பட்ட மேடைகள், மெதுவாகச் சுழலும் மிகப் பெரிய மின்விசிறிகள் (High-volume low-speed fan), பசுமை வளங்கள் ஆகியவற்றை அவை ஏற்கனவே ஒருங்கிணைத்துள்ளன.

குளிரூட்டும் கட்டமைப்பின் அங்கங்கள்

குளிரூட்டும் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, 2030க்குள் 10 குளிர்ச்சியான சிறிய ஓய்விடங்களையும் குளிர் மண்டலங்களையும் (பெரிய பகுதிகள்) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவற்றில் ஒன்றாக, சிலோசோ கடற்கரையில் குளிர்ச்சியான இடங்களின் செயல்திறனை எஸ்டிசி சோதிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு மூடுபனி அமைப்புகள், நிழல் கொண்ட இருக்கைகள், சூரியக் கதிர்வீச்சைப் பிரதிபலிக்கும் சிறப்புவகைச் சாயத்தால் பூசப்பட்ட சுவர்கள் ஆகியவை ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

சிலோசோ கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குளிர்ச்சியான ஓய்விடம்.
சிலோசோ கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குளிர்ச்சியான ஓய்விடம். - படம்: செந்தோசா மேம்பாட்டுக் கழகம்

சென்ட்ரல் பீச் பஸாருக்கும் இதேபோன்ற புதுப்பிப்பு 2026ல் நிறைவடையவுள்ளது. அங்கு நிழல் தரும் பெரிய குடைகள், ஒளி மற்றும் வெப்பப் பிரதிபலிப்புத் தலங்கள், ஒருங்கிணைந்த மின்விசிறிகள் போன்ற வசதிகள் சேர்க்கப்படும்.

உடனடி ‘நோ ரிக்ரெட்ஸ்’ நடவடிக்கைகள்

நீண்டகாலத் திட்டங்கள் செயல்படும் வரை, விரைவில் பலனளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மின்விசிறிகள் மேம்படுத்தப்பட்டன; அல்லது புதிதாக நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் மெதுவாகச் சுழலும் மிகப் பெரிய மின்விசிறிகளும் அடங்கும்.

தீவில் 26 நீரேற்றப் புள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. 2025ல் மட்டும் மூன்று புதிய குளிர்ந்த குடிநீர் நிலையங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

நிழல் வசதியை விரிவாக்கும் பணிகளில் கடற்கரை, முக்கியச் சாலையோரங்களில் 400 புதிய மரங்கள் நடப்பட்டுள்ளன.

கதிர்வீச்சு வெப்பத்தைக் குறைக்க, நடைபாதைகளில் 2,900 சதுர மீட்டர் பரப்பளவில் மண்ணில்லா பசுமைக் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

“சில நேரங்களில் பாரம்பரியமான தீர்வுகளே மிகப் பயனுள்ளதாக அமைகின்றன. மின்விசிறிகள், நீரூற்று நிலையங்கள், மரம் நடுதல் போன்றவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன,” என்றார் திரு மைக்கல்.

செந்தோசா முழுவதும் ஒத்துழைப்பு

தீவு முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்களும் அவற்றின் இயக்குநர்களும் இந்த முயற்சியில் பங்காற்ற இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.

எடுத்துக்காட்டாக, ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவின் வீவ் மால், எத்திலீன் டெட்ராஃப்ளூரோஎத்திலீன் (ETFE) கூரைகள், ஜெட் விசிறிகள், மறுசுழற்சி செய்யப்பட்ட குளிர்நீர் அடிப்படையிலான குளிரூட்டும் அமைப்புகளை ஒருங்கிணைத்துள்ளது.

‘மவுன்ட் ஃபேபர் லிசர்’ குழுமம், சோஃபிட்டல் செந்தோசா ஆகியவை நிழல் அமைப்புகள், குளிர் கூரைகள், நீரால் குளிரூட்டப்பட்ட வெளிப்புற இடங்களை உருவாக்கி வருகின்றன.

சோஃபிட்டல் செந்தோசா ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டும் கருவி (air cooler).
சோஃபிட்டல் செந்தோசா ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டும் கருவி (air cooler). - படம்: செந்தோசா மேம்பாட்டுக் கழகம்

“இது எஸ்டிசியின் பயணம் மட்டுமன்று. தீவு முழுவதுமுள்ள எங்கள் பங்காளித்துவ அமைப்புகளுடனான ஒருங்கிணைந்த பயணம் இது. ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், தீர்வுகளை விரைவில் விரிவுபடுத்தலாம். நாடு முழுவதும் பயன்படுத்தக்கூடிய புதுமைகளுக்கான சோதனைத் தளமாகவும் செந்தோசாவை உருவாக்கலாம்,” என்று வலியுறுத்தினார் திரு மைக்கல்.

‘கூலிங் செந்தோசா ரோட்மேப்’ மூலம், பருவநிலை நிலைத்தன்மை கொண்ட சுற்றுலாத் துறையை உருவாக்க எஸ்டிசி தனது நீண்டகால உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில், வடிவமைப்பிலும் உள்கட்டமைப்பிலும் வெப்பக் குறைப்பை முக்கிய அம்சமாகக் கொண்டுவரும் திட்டங்கள்மூலம், செந்தோசாவை நிலைத்தன்மையுடனும் வருகையாளர்களுக்கு அதிக வசதியான தலமாகவும் தக்கவைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்