சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் சவால்களை எதிர்கொள்வதில் இந்திய அமைப்புகளுக்குத் துணைபுரிய புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவள துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், சட்ட, போக்குவரத்து மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை ஆகியோர் தலைமைதாங்குவர்.
‘ஹோம்டீம்என்எஸ்@காத்திப்’இல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) 400 இந்தியச் சமூகத் தலைவர்களுக்காக மக்கள் கழக நற்பணிப் பேரவை நடத்திய சந்திப்பில் சிறப்புரையாற்றிய தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் இதனை அறிவித்தார்.
அமைச்சர்கள் இந்திராணி ராஜா, டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மூத்த துணையமைச்சர்கள் முரளி பிள்ளை, ஜனில் புதுச்சேரி, துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், ஹமீது ரசாக் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிங்கப்பூரின் இந்தியச் சமூகத்தினர் கண்டுள்ள வளர்ச்சியையும், தொடர்ந்து எதிர்கொள்ளும் சவால்களையும், அச்சவால்களைக் கையாள்வதில் நற்பணிப் பேரவை, சிண்டா போன்ற அமைப்புகள் ஆற்றும் பங்குகளையும் திரு சண்முகம் பாராட்டிப் பேசினார்.
“இங்கு கிட்டத்தட்ட 100 அமைப்புகளின் பேராளர்கள் கூடியுள்ளனர். இது சிறப்பு. நீங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அங்கங்களில் பணியாற்றலாம். ஆனால், உண்மையான மாற்றம் ஏற்பட நீங்கள் ஒன்றிணைந்து இன்னும் பலரைச் சென்றடையவேண்டும்.
“இந்நிலையில், நீங்கள் அதிக வளங்கள் கொண்ட அமைப்புகளுடன், அதாவது அரசாங்க ஆதரவு பெற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டால் பயனளிக்கும். அத்தகைய ஓர் அமைப்பு நற்பணிப் பேரவை. ஏனெனில், அது மக்கள் கழகத்தின் ஓர் உறுப்பு; ஒவ்வொரு தொகுதியிலும் அது உள்ளது. மற்றொன்று சிண்டா. அதற்குப் பலவகையான அரசாங்க ஆதரவு கிடைக்கிறது,” என்றார் திரு சண்முகம்.
“நற்பணியைப் பொறுத்தமட்டில் கருத்தரங்குகள், இளையர் மேம்பாடு, முதியோருக்கான ஆதரவு எனப் பலவற்றையும் செய்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் வார இறுதிகளில் கடுமையாக உழைக்கின்றன. நற்பணிப் பேரவையும் வெவ்வேறு தொகுதிகளிலுள்ள இந்திய அமைப்புகளுடன் இணைந்து எவ்வாறு செயல்படலாம் என்பதை ஆராய்வது பயனளிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“இளையர் மேம்பாடு, சிறுவர்நல, குடும்பநல மேம்பாடு எனப் பலவற்றிலும் சிண்டா கவனம் செலுத்துகிறது, பெருமாற்றத்தை ஏற்படுத்துகிறது. சிறுவர்களுக்காக வாசிப்பு, கணிதத் திட்டங்கள், ஸ்டெப் நிலையங்கள், வழிகாட்டுதல்கள், இளையர் மன்றங்கள், குடியிருப்பாளர்களின் தேவைகளை அறிதல் எனப் பலவற்றையும் சிண்டா மேற்கொள்கிறது,” என்றார் அமைச்சர் சண்முகம்.
“சிங்கப்பூரில் பல்கலைக்கழகப் படிப்பைப் பொறுத்தவரை, இந்தியர்கள் ஆக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.
“நான் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேர்ந்தபோது, ‘கல்விநிலை குறைவாக உள்ளது, வாழ்க்கைத் தரம் குறைவாக உள்ளது’ என இந்தியச் சமூகம் பற்றி பலரும் கூறினர். ஆனால், இன்றோ நாம் வேறுபட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுகிறோம். இன்று, நம் சமூகத்தில் பெரும்பாலோர் வீட்டு உரிமையாளர்களாக உள்ளனர்; 40 விழுக்காட்டினர் பட்டதாரிகள்,” என்றார் அவர்.
மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் ஏன் இன நல்லிணக்கத்தில் இவ்வளவு கவனம் செலுத்தப்படுகிறது என்பதையும் அமைச்சர் சண்முகம் விவரித்தார்.
தலைமைத்துவப் புதுப்பிப்பில் உதவி: முரளி பிள்ளை
திரு முரளி பிள்ளையும் சமூக அமைப்புகளுடன் இணைந்து இப்புதிய குழு செயல்படுவதன் நோக்கத்தை விவரித்தார்.
“அன்று சவால்களைச் சந்தித்த பல குடும்பங்களும் இன்று சமூக ஏணியில் ஏறியுள்ளனர். ஆனால், இன்னும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவர்கள் அடைந்திருக்கவேண்டிய அளவில் பயன்களை அடையவில்லை. ஏனெனில், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பன்முகம் கொண்டவை. அவற்றைப் பரந்துபட்ட முறையில் சமாளிக்க வேண்டும்.
“அதனால் எவ்வாறு இந்திய அமைப்புகளின் ஆதரவைப் பெற்று, அவர்களுடன் சிறு குழு உரையாடல்களில் ஈடுபட்டு எப்படி இச்சவால்களைச் சந்திக்கலாம் எனச் சிந்திப்போம்,” என்றார் திரு முரளி பிள்ளை.
அதே சமயம், இளம் தலைவர்களை ஈர்த்து தலைமைத்துவத்தைப் புதுப்பிப்பதிலும் இந்திய அமைப்புகளுக்குத் துணைபுரிய விரும்புவதாக அவர் கூறினார்.
இருப்பினும், புதுப்பிப்பு குறித்த முடிவுகளை அந்தந்த அமைப்புகள்தான் எடுக்க வேண்டும் என்றார் திரு தினேஷ். புதிய செயற்குழு கையாளவுள்ள உத்திகளை அவர் விவரித்தார்.
“முதலில், நாம் இந்தியச் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைப் பண்பாட்டு, மொழி, சமய அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும். இயன்றவரை நாம் அனைவரையும் உள்ளடக்க வேண்டும். அப்போதுதான் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற முடியும்,” என்றார் திரு தினேஷ்.
குறிப்பாக, அரசியல் பொறுப்பு வகிப்போர் மட்டுமின்றி இந்திய அடித்தளத் தலைவர்களும் சமூகத்துக்கு உதவும், ஆதரிக்கும் நிலையில் இருக்க இக்குழு துணைபுரியும் என்றார் திரு தினேஷ்.
அடுத்த கட்டமாக, திரு தினேஷ், திரு முரளி பிள்ளை வழிநடத்தும் இக்குழுவை இந்திய அமைப்புகள் நாடி, தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.