இந்தியச் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து, சமூகத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல இந்திய அமைப்புகள் ஒன்றிணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 7ஆம் தேதி மக்கள் கழக நற்பணிப் பேரவை நடத்திய சந்திப்பில் சிறப்புரையாற்றிய தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான கா. சண்முகம், சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் சவால்களை எதிர்கொள்வதில் இந்திய அமைப்புகளுக்குத் துணைபுரிய புதிய குழு ஒன்று அமைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, குழுவின் முதல் கலந்துரையாடல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
முதல் அமர்வை வழிநடத்திய திரு முரளி, வெவ்வேறு இந்து சமய அமைப்புகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 பேரைச் சந்தித்துப் பேசினார்.
கலந்துரையாடல்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திரு முரளி, பின்தங்கிய குடும்பங்கள், சிறையில் உள்ளவர்கள், முன்னாள் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியச் சமூகத்திற்கான முக்கிய முன்னுரிமைப் பகுதிகளைக் கூட்டாக அடையாளம் கண்டு, அதற்கான வழியை வகுப்பதே இதன் நோக்கம் என அவர் கூறினார்.
குழுவிற்குத் திரு முரளியும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணை அமைச்சர் திரு தினேஷ் வாசு தாசும் தலைமை தாங்குகின்றனர்.
“முடிந்த அளவிற்கு பல இந்திய அமைப்புகளுடன் கலந்து பேசுவதற்கு முன்னுரிமை தரப்படும். இந்தியச் சமூகத்திற்கான முக்கியப் பிரச்சினைகளை உடனடியாகக் கண்டறிவதுதான் எங்கள் முக்கிய நோக்கம்,” என்று சொன்னார் திரு முரளி.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த சில மாதங்களில் பல இந்திய அமைப்புகளைச் சந்தித்து, அவர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைப்பது பற்றிப் பேசிய திரு முரளி, முதலில் சமய அமைப்புகள் மீது கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்தார்.
சமயம், சமூகப் பொருளியல், மொழி, கலை மற்றும் விளையாட்டு என நான்கு முக்கிய பிரிவுகளில் இக்குழு கவனம் செலுத்தும்.
இதில் சமயம், சமூகப் பொருளியல் பிரிவுகளில் தாம் கவனம் செலுத்தப்போவதாகவும், மொழி, கலை மற்றும் விளையாட்டுப் பிரிவுகளில் திரு தினேஷ் வாசு தாஸ் கவனம் செலுத்தப்போவதாகவும் திரு முரளி தெரிவித்தார்.
இதையடுத்து, இந்திய முஸ்லிம் அமைப்புகளுடன் கலந்துரையாடல் அமர்வை நடத்தும் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகச் சொன்னார் திரு முரளி.
முனீஸ்வரன் சமூக சேவைகளின் இயக்குநர் மதுபாலா முதல் குழுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
பல ஆண்டுகளாக முனீஸ்வரன் சமூக சேவை, தொண்டூழியர்கள் மூலம் சிறைக் கைதிகளுக்கு இந்து சமய ஆலோசனை வழங்கிவரும் உன்னத நோக்கத்தில் ஈடுபட்டு வருகிறது.
அதற்குப் போதுமான தொண்டூழியர்கள் இல்லை என வருந்திய திருவாட்டி மதுபாலா, இதர ஆலயங்களும் இதில் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் அதற்குத் தீர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.