பரபரப்பான ‘கஃபே’ கலாசாரம், கடற்பகுதியை எட்டிப்பார்க்கும் வீடுகள், துடிப்பான சமூகத்தை ஆதரிக்கும் மிதிவண்டித் தடங்கள் போன்ற மேம்பாடுகளுக்கு பெயர் பெற்றது பொங்கோல் வட்டாரம்.
துடிப்பான, இளமையான பொங்கோல் வட்டாரத்தின் பாரம்பரியத்துடன் இணைந்த வரலாற்றைப் பறைசாற்றும் முயற்சியில் தேசிய மரபுடைமைக் கழகம் ‘ஹான் @ பொங்கோல்’ எனும் பாரம்பரிய நடுவம் ஒன்றை நிறுவியுள்ளது.
காத்தோங்-ஜூ சியாட், கிளமெண்டி வட்டாரங்களுக்குப் பிறகு மூன்றாவதாக பொங்கோல் வட்டாரத்தில் இந்தப் பாரம்பரிய நடுவம் அறிமுகம் கண்டுள்ளது.
“துடிப்பான பொங்கோல் சமூகத்தை விரிவுபடுத்தவும் வட்டார வரலாறு, பாரம்பரியம் மீதான ஆர்வத்தை வளர்க்கவும் இந்த நடுவம் உதவும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் தேசிய மரபுடைமைக் கழகத்தின் கல்வி, சமூகநலத் துறை இயக்குனர் ஜெரால்ட் வீ.
‘ஹான் @ பொங்கோல்’ பாரம்பரிய நடுவத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில் ஜூன் 6 முதல் 15ஆம் தேதி வரை பத்துக்கும் மேற்பட்ட சமூகப் பங்கேற்பாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
அனைத்து நிகழ்ச்சிகளும் பொங்கோல் வட்டாரத்தின் தனித்துவமான வரலாற்றையும் பரிணாமத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமையும்.
நீருடன் உறவு கொண்டிருக்கும் பொங்கோல் வட்டாரத்தை வெளிப்படுத்த முதலில் ‘கலர்ஸ் ஒன் ஷோர்’ எனும் கலை நிறுவல் ‘தி கோவ், பொங்கோல் வாட்டர்வே பாயிண்ட்’ வளாகத்தில் ஜூன் 6 முதல் 15ஆம் தேதிவரை மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அனுமதிக் கட்டணம் $10.
இந்த நிறுவல் தொடர்பான பயிலரங்கு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஜூன் 8ஆம் தேதியும் 15ஆம் தேதியும் இடம்பெறுகிறது. இதற்கான கட்டணம் $35.
தொடர்புடைய செய்திகள்
உணர்வுகளைப் பயன்படுத்தி பொங்கோல் வட்டாரத்தை அனுபவிக்க இரண்டு கலாசாரப் பயிலரங்குகள் ஜூன் 8, 14, 15ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதைத் தொடர்ந்து ஒரு முதன்மை முயற்சியாக ‘வட்டார கதைகள்’ தொகுப்பு ஒன்று ஜூலையில் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். இந்த முயற்சியில் பொங்கோல் குடியிருப்பாளர்களின் உருவப் படங்களை வரையவும் அல்லது புகைப்படம் எடுக்கவும் அழைப்பு விடுக்கப்படும். அதன்வழி ஒவ்வொரு பொங்கோல் குடியிருப்பாளரின் கதைகள் பகிரப்படும்.
மேலும் தகவலுக்கு roots.gov.sg/han/Neighborhoods/Punggol இணையப்பக்கத்தை நாடலாம்.

