பிராஸ் பசாவில் இருந்த பழைய செயிண்ட் ஜோசஃப் கல்விக் கழகக் கட்டடம் கூடிய விரைவில் புதிய வடிவமைப்பு அரும்பொருளகமாக மாறக்கூடும்.
கிட்டத்தட்ட 160 ஆண்டுகால பழைமையான அந்தக் கட்டடம் புதிய வடிவமைப்பு அரும்பொருளகத்துக்கு உகந்ததா என்று தேசிய மரபுடைமைக் கழகம் ஆய்வு செய்கிறது.
இதற்குமுன் அங்கு சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் இருந்தது.
புதிய இடம் உறுதிசெய்யப்பட்டுவிட்டால் சிங்கப்பூரின் வடிவமைப்பாளர்களையும் வடிவமைப்பு நிறுவனங்களையும் ஒரே கூரையின் கீழ் காண நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
அதில் ஆடை வடிவமைப்பு, கட்டட வடிவமைப்பு, நகரத் திட்டமிடல் ஆகியவை அடங்கும்.
சிங்கப்பூர் வடிவமைப்பாளர்களுக்கு உலக அளவில் கிடைக்கும் அங்கீகாரம் அதிகரித்து வருவதை அடுத்து புதிய அரும்பொருளகத்தை அமைக்க திட்டமிடப்பட்டது.
புதிய அரும்பொருளகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று நாடாளுமன்றம் குறிப்பிடவில்லை.
ஆனால் நல்ல வடிவமைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் பொதுமக்களின் விழிப்புணர்வையை அதிகரிக்கவும் புதிய அரும்பொருளகம் தளம் அமைக்கும் என்றார் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய மரபுடைமைக் கழகம் அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆய்வுப் பணிகளைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு இடைப்பட்ட காலத்தில் தேசியக் கலை அரும்பொருளகம் அதன் முன்னாள் தளத்தில் அடிப்படை சீரமைப்புப் பணிகளைச் செய்வதாகக் கலாசார, சமூக, இணையர் அமைச்சு சொன்னது.
காலனித்துவக் கட்டடமான முன்னாள் செயிண்ட் ஜோசஃப் வளாகத்தை முடிந்த அளவு நல்ல நிலையில் வைத்திருக்கவும் அமைச்சு முயல்கிறது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேசியக் கலைகள் மன்றம் குடியிருப்புப் பேட்டைகளில் ஐந்து பொது கலைத் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறது.
நவீனக் கலை பற்றி மக்கள் அறிந்துகொள்ள அது வாய்ப்பளிக்கும்.