தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தற்காப்பு, அணுவாயுத ஆற்றலில் விரிவடையும் ஒத்துழைப்பு

சிங்கப்பூர் - பிரான்ஸ் உறவில் புதிய மேம்பாடு

2 mins read
7b67fa86-6ea8-430a-83a2-b61266b224ba
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனும் நாடாளுமன்றக் கட்டடத்தில் 13 ஒப்பந்தங்கள் உறுதிசெய்யப்படுவதைப் பார்வையிட்டனர்.  - படம்: சாவ் பாவ்

குடிமை பயன்பாட்டுக்கான அணுவாயுத ஆற்றல், புலனாய்வுப் பகிர்வு, தற்காப்புத் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பிரான்சும் சிங்கப்பூரும் தங்களது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவுள்ளன.

இதன்மூலம் அவ்விரு நாடுகளும் தங்களது உறவைப் பரந்த உத்திபூர்வ பங்காளித்துவமாக மேம்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய நாடு ஒன்றுடன் சிங்கப்பூர், பரந்த உத்திபூர்வ பங்காளித்துவத்தில் இணைவது சிங்கப்பூருக்கு இது முதல்முறை. இதற்கு முன்னதாக அவை, 2012ல் உத்திபூர்வ பங்காளித்துவத்திற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தன.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனும் நாடாளுமன்றக் கட்டடத்தில் 13 ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படுவதைப் பார்வையிட்டனர்.

ஒப்பந்தப் பரிமாற்றத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தற்போதைய நிச்சயமற்ற உலகில் சிந்தையில் ஒத்துப்போகக்கூடிய நாடுகள் ஒன்றுபட்டு செயலாற்றுவது கூடுதல் முக்கியம் என்று கூறிய திரு லாரன்ஸ் வோங், இதற்குச் சிங்கப்பூரும் பிரான்சும் முக்கியம் என்று கூறினார்.

“அதனால் அதிபர் மெக்ரோனும் நானும் நம் இருநாட்டு உறவைப் பரந்த உத்திபூர்வ பங்காளித்துவ நிலைக்கு உயர்த்தியுள்ளோம். தற்போதைய துறைகளில் நம் ஒத்துழைப்பை இது ஆழப்படுத்தும். மின்னிலக்கமயமாதல், கரிம வெளியேற்றக் கட்டுப்பாடு ஆகியவற்றை இது அதிகப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

இது சிங்கப்பூர் செய்துகொண்டுள்ள மூன்றாவது, பரந்த உத்திபூர்வ பங்காளித்துவமாகும். இதுபோன்ற ஒப்பந்தங்கள் வியட்னாமுடனும் ஆஸ்திரேலியாவுடனும் கையெழுத்திடப்பட்டன. இந்தியாவுடனும் அத்தகைய உடன்பாட்டில் சிங்கப்பூர் இணைவதற்கான திட்டங்கள் நடப்பில் உள்ளன.

பிரெஞ்சு மொழியில் பேசிய திரு மெக்ரோன், பிரான்சுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஒத்த கருத்துகள் கொண்டுள்ள சமூகம் நிலவுவதாகக் கூறினார். உக்ரேன் மீது ரஷ்யா 2022ல் படையெடுப்பு நடத்தியபோது சிங்கப்பூர் வர்த்தகத் தடை விதித்த உதாரணத்தைத் திரு மெக்ரோன் சுட்டினார்.

அணுவாயுத ஆற்றலின் தொடர்பில் அவ்விரு நாடுகளும் பாதுகாப்பு, ஊழியரணி மேம்பாடு, ஆய்வு, சுற்றுப்புறப் பாதுகாப்பு, ஊழியர் நல பாதுகாப்பு, அவசரநிலைக்கான தயாரிப்பு மற்றும் பதில் நடவடிக்கை உள்ளிட்ட பல துறைகளில் கையெழுத்திட்டனர்.

குடிமைப் பயன்பாட்டுக்கான அணுவாயுத ஆற்றலுக்கான சாத்தியத்தைச் சிங்கப்பூர் ஆராயும் வேளையில் பிரெஞ்சு திறனாளர்களின் உதவியைப் பயன்படுத்த இந்த ஒப்பந்தங்கள் உதவும் என்று பிரதமர் வோங் தெரிவித்தார். தற்காப்புத் துறை பற்றியும் பேசிய திரு வோங், அந்தத் துறை தங்களது இருநாட்டு உறவில் தூணாக எப்போதும் திகழ்ந்து வருவதாகக் கூறினார்.

“புதிய ஒத்துழைப்பின்கீழ் நாங்கள் மற்ற துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்தவுள்ளோம். ராணுவக் காரணங்களுக்கான தற்காப்புத் தொழில்நுட்பம், முக்கிய தொழில்நுட்பம், வளர்ந்துவரும் தொழில்நுட்பம் போன்ற மற்ற துறைகளில் நாங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவுள்ளோம்.

“கூட்டுறவில் நாம் மேற்கொண்டுள்ள முன்னேற்றத்திற்கு வலுசேர்க்கவுள்ளோம். உயரதிகாரிகளுக்கு இடையே கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்வது, அதற்கான வழிகளில் ஒன்று,” என்று திரு வோங் கூறினார்.

தற்காப்புத் துறையில் அவ்விரு நாடுகள், மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதன்வழி, இருபக்க நன்மையும் பகிரப்பட்ட திறன்களும் கொண்டுள்ள பல்வேறு துறைகளில் இந்நாடுகள், தற்காப்புத் துறைக்கான தங்கள் உறவுகளை மேம்படுத்த முனைகின்றன. செயற்கை நுண்ணறிவுத் திறனை வளர்ப்பதற்கான கூட்டு ஆய்வு, உருவாக்கத்திற்கான ஆய்வுக்கூடத்தின் மேம்பாடுகளுக்கும் அவை வகை செய்கின்றன.

கூடுதல் செய்தி: பக்கம் 2, 3
குறிப்புச் சொற்கள்