நோய் கண்டறிவதற்கு ஆகும் நேரத்தைப் பலமணி நேரத்திலிருந்து 20 நிமிடங்களாகக் குறைக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள ஒரு புதிய நுண்சில்லு சாதனம்.
மிகச் சிறிய அளவிலான நுண்ணிய மரபணு அடையாளக்குறிகளைப் பயன்படுத்தி, பல்வேறு நோய்களைக் கண்டறியும் நேரத்தை அந்தச் சாதனம் குறைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரவுகளைச் செயலாக்கி அனுப்புவதற்கு ஒளித் துகள்களைப் பயன்படுத்துகிறது அந்தச் சாதனம். அத்துடன், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘நானோஃபோட்டானிக்’ நுண்சில்லுவை, செயற்கை நுண்ணறிவு மூலம் தானியக்கமாக்கி, படப் பகுப்பாய்வுடன் இணைக்கும் வேலையையும் அது செய்யக்கூடும்.
நுண்சில்லுவில் ஏற்றப்படும் ஒரு துளி ரத்தம் அல்லது உமிழ்நீர், பல நுண்ணிய ‘ஆர்என்ஏ’ உயிர்மை அடையாளங்காட்டிகளை விரைவாகக் கண்டறிய உதவுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுப் படமாக்கலைப் பயன்படுத்தி அவை பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
“வெவ்வேறு உயிரி அடையாளங்காட்டிகளைக் குறிவைக்கும் சரியான ஆய்வுக் கருவிகளுடன், இந்தத் தொழில்நுட்பத்தை இருதய மற்றும் கிருமித்தொற்றுகள் உட்பட பல நோய்களுக்குப் பயன்படுத்த முடியும் என்பதை, நுரையீரல் புற்றுநோய் அணுக்களுடன் நாங்கள் நடத்திய சோதனைகள் வெற்றிகரமாக நிரூபித்துள்ளன,” என்று இணைப் பேராசிரியர் சென் யூ-செங் கூறினார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் மின்னணுப் பொறியியல் பிரிவில் பணியாற்றும் அவர், புதன்கிழமை (ஏப்ரல் 15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதிய சாதனத்தின் ஆற்றல் குறித்து விளக்கினார்.
பலதுறை மருந்தகங்களிலும் தனியார் மருந்தகங்களிலும் நோய்களை விரைவாகக் கண்டறிய இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

