உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் குடல் ஆரோக்கியத்திற்கான புதிய நிலையம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குடல் நோய் வராமல் தடுப்பது, அதற்கான பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொள்வது, குடல் நோயிலிருந்து மீண்டுவருவது, தொடர் பராமரிப்பு என அனைத்தையும் ஒரே கூரையின்கீழ் வழங்குகிறது புதிய செரிமான சுகாதார நிலையம்.
உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) நிலையம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
செரிமானத்தில் ஏற்படும் கோளாறுகள், நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, மலச்சிக்கல் போன்ற பொதுவான பிரச்சினைகள் முதல் வயிறு, குடல், கல்லீரல், கணையம், பித்த நாளங்களில் ஏற்படும் புற்றுநோய் போன்ற சிக்கலான நோய்கள் வரை செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் பலவகைப்படுகின்றன.
“வடக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட, தடுப்பு சார்ந்த, தனிநபரை அடிப்படையாகக் கொண்ட பராமரிப்பை வழங்க சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதி இது,” என்றார் சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம்.
உட்லண்ட்ஸ் மருத்துவமனை ஆஸ்துமா, நீரிழிவு, மனநல மருத்துவம், பெருங்குடல் சிகிச்சைக்குப் பிந்திய பராமரிப்பு ஆகியவற்றுக்கு நான்கு நிபுணத்துவ ஆதரவுபெற்ற பராமரிப்புத் திட்டங்களை வழங்குகிறது.
மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற சுகாதார அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது, பிற பகுதிகளில் உள்ளோருடன் ஒப்புநோக்க, சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள சிங்கப்பூரர்களிடையே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் அதிகம் என்று கூறினார்.
அத்துடன் அங்குள்ள குடியிருப்பாளர்கள் உடற்பயிற்சி செய்வதும் குறைவு என்றார் அவர்.
உட்லண்ட்சில் வசிக்கும் 250,000 பேர் உட்பட, சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் உள்ள 500,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வதை ஊக்குவிக்க தேசிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ற சுகாதாரப் பராமரிப்பை அமைப்பதில் உட்லண்ட்ஸ் மருத்துவமனை உறுதியாக இருப்பதைச் செரிமான சுகாதார நிலையம் பிரதிபலிக்கிறது என்றார் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோ ஹாவ்.
