மேம்பட்ட பராமரிப்புத் திட்டமிடுதல் படிவங்களை சிங்கப்பூரர்கள் இணையம் மூலம் பூர்த்தி செய்வதை எளிதாக்க இலவச மின்னிலக்கச் சாதனம் சனிக்கிழமை (ஜூலை 19) அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு myACP என்று பெயரிடப்பட்டுள்ளது.
தங்கள் தனிப்பட்ட இலக்குகள், விழுமியங்களுக்கு ஏற்ப, தங்களுக்கு விருப்பமான மருத்துவ சிகிச்சையைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்க இந்தச் சாதனம் வகை செய்கிறது.
அறிவாற்றல் முடங்கிய நிலை ஏற்பட்டால் தங்கள் சார்பாக சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான முடிவெடுக்க இச்சாதனம் மூலம் இன்னொருவரை நியமிக்கலாம்.
புதிய மின்னிலக்கச் சாதனத்தைச் சுகாதார அமைச்சு, ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு அமைப்பு, ‘கவ்டெக்’ (GovTech) ஆகியவை ஹார்ட்பீட்@பிடோக்கில் அறிமுகப்படுத்தின.
இந்தச் சாதனம் இருப்பதால் மேம்பட்ட பராமரிப்புத் திட்டமிடுதலை வழிநடத்துபவரை நேரில் சந்திக்கத் தேவையில்லை என்றார் அறிமுக விழாவில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.
ஆரோக்கியமாக இருக்கும் 21 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் இந்த மின்னிலக்கச் சாதனத்தைப் பயன்படுத்தி தங்களுக்குப் பிடித்தமான சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்து இணையம் வழி சமர்ப்பிக்கலாம்.
செயல்முறை குறித்து போதிய தகவல் அறியாததால் பலர் இந்த மேம்படுத்தப்பட்ட பராமரிப்புத் திட்டமிடுதல் படிவங்களைப் பூர்த்தி செய்யாமல் இருப்பதாக அமைச்சர் ஓங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேம்படுத்தப்பட்ட பராமரிப்புத் திட்டமிடுதலை வழிநடத்துவோரைச் சந்திக்க ஏற்பாடு செய்வது அசௌகரியமாக இருப்பதாகப் பலர் உணர்கின்றனர்.
அதற்கென நேரம் செலவிட வேண்டி வரும் என்றும் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்றும் அவர் கூறினார்.
இத்தகைய திட்டமிடுதலில் ஈடுபட இதற்கு முன்பு பொது மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள் அல்லது குறிப்பிட்ட சமூகப் பராமரிப்பு நடத்துவோரை நாட வேண்டி இருந்தது.
தற்போது https://mylegacy.life.gov.sg/ எனும் இணையப்பக்கத்தில் புதிய மின்னிலக்க சாதனத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட பராமரிப்புத் திட்டமிடுதலில் ஈடுபடலாம்.

