கடந்த ஓராண்டில், மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றம் தனது குடியிருப்புப் பேட்டைகளுக்கான செயல்பாடுகளை வலுப்படுத்தியுள்ளது.
மேலும், நகர மன்றத்தின்கீழ் உள்ள வட்டாரங்களில் தூய்மையை அதிகரிக்கவும், மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குடியிருப்பாளர்களுக்கான நீடித்த நிலைத்தன்மையை முன்னெடுத்துச் செல்லவும் அத்தொகுதியின் குடியிருப்புப் பகுதிகளில் மேம்பாடுகளை அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.
மின்தூக்கிகள்மூலம் பயணம் செய்து ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடிக் குடியிருப்பின் பல்வேறு தளங்களைச் சுத்தம் செய்யக்கூடிய ஒரு தானியங்கி துப்புரவு இயந்திரத்தின் முன்னோடித் திட்டம் அவற்றுள் ஒன்று.
பூச்சி கட்டுப்பாடு நடவடிக்கைகள், தீச் சம்பவ மீட்புப் பணி, டெங்கி அபாயங்கள் குறித்த செயல்திறன் குறியீடுகளின் தொகுப்பு ஆகியவையும் மேம்பாட்டுத் திட்டத்தில் அடங்கும்.
மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றத்தின் தலைவரும், மெக்பர்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டின் பெய் லிங் கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியின்றி வென்றதால் தங்களால் மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் பணிகளை உடனடியாகத் தொடங்க முடிந்ததாகக் குறிப்பிட்டார்.
எனினும், குடியிருப்பாளர்கள் தங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவரது நகர மன்றக் குழு, அரசாங்க நிறுவனங்களுடனும் குடியிருப்பாளர்களுடனும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதோடு மேம்பாடுகளையும் முன்னெடுப்பதாக அவர் கூறினார்.
இதுபோன்ற தீர்வுகளின்மூலம் குடியிருப்பாளர்களுக்கு மேலும் நம்பகமான சேவைகளையும் சிறந்த வாழும் சூழலையும் வழங்குவதே தமது நகரமன்றத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நகர மன்றச் சேவைகளை மேம்படுத்துவதற்காக தூய்மை, பூச்சி கட்டுப்பாடு, தீச் சம்பவ மீட்புப் பணி, இடையூறு நிர்வாகம் போன்ற முக்கிய அம்சங்களில் தெளிவான சேவைத் தரநிலைகள், இலக்குகளுடன் கூடிய ஒரு முறையான செயல்திறன் கட்டமைப்பு ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.
இத்தகைய முயற்சிகள் குடியிருப்புப் பகுதிகளின் சூழலில் கண்கூடான மேம்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இவ்வாண்டு மார்ச் மாதம் வரை, மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் நகர மன்றத் தொகுதிகள் முழுவதும், சராசரியாக தூய்மை தொடர்பான புகார்கள் 10 விழுக்காடு குறைந்துள்ளன.
அதே காலக்கட்டத்தில் எலிகள் தொடர்பான புகார்கள் 17 விழுக்காடு குறைந்துள்ளன.
அதோடு, புறாக்கள் தொடர்பான புகார்களுடன் தீ விபத்து அபாயங்களைக் குறைக்கும் விதமாக பொதுப் பாதைகளைத் தடுத்து பொருள்கள் குவித்து வைக்கப்படும் சம்பவங்களும் குறைந்துள்ளன.
குடியிருப்புப் பகுதிகளிலுள்ள மக்களின் வயது, நடமாட்டம், மக்கள்தொகை அமைப்பு போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளால், வெவ்வேறு பிரிவுகளில் அவற்றுக்கான மேம்பாடுகள் தனிப்பட்டு மாறுபடுகின்றன.
கடந்த ஓராண்டில், நகரமன்றம் குடியிருப்புப் பகுதி முழுவதும் 57 மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்ததோடு, உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, பொதுவான இடங்களில் வசதிகளை அதிகரித்துள்ளது.
அவற்றுள் 22 புதிய கூரையிடப்பட்ட இணைப்புப் பாதைகள், 18 மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
54 வீடமைப்பு புளோக்குகளில் பழுதுபார்ப்பு, மறுவடிவமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிறந்ததொரு குடியிருப்புச் சூழலை உருவாக்கும் நோக்கிலும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் நகர மன்றம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
துப்புரவுச் செயல்பாட்டைச் சீராக்கி மேம்படுத்தவும், மனிதவளத்தை திறம்பட பயன்படுத்தவும் வெள்ளிக்கிழமை (மே 22) புளோக் 37C யூனோஸ் ரோடு 2ல் முதன்முறையாகத் தானியங்கி துப்புரவு இயந்திரம் ஒன்று சோதனை முறையில் ஈடுபடுத்தப்பட்டது.
மேம்பட்ட உணர்கருவிகள் (சென்சர்கள்) பொருத்தப்பட்டு, அந்த புளோக்கின் மின்தூக்கி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், வீவக புளோக்குகளின் பல தளங்களையும் அடைந்து குடியிருப்புப் பகுதிகளில் நடைபாதைகளை சுத்தம் செய்ய உதவும்.
மற்ற குடியிருப்புப் பகுதிகளில் இதனைப் பயன்படுத்துவதற்கான செயல்திறன், தரம், தொழில்நுட்பத் தேவைகள் போன்ற அளவுகோல்களுடன், இந்த சோதனையின் ஒரு பகுதியாகக் குடியிருப்பாளர்களின் கருத்துகளையும் நகர மன்றம் மதிப்பீடு செய்யும்.
இதற்கிடையில், குடியிருப்புப் பகுதியின் தூய்மையை மேம்படுத்தவும், தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாகப் பதிலளிக்கவும், பிரேடல் ஹைட்ஸ், யூனோஸ் கோர்ட், மரின் டெரஸ் ஆகிய இடங்களில் கியூஆர் குறியீடுமூலம் பொதுமக்கள் புகாரளிக்கும் முறையை நகர மன்றம் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சியின்மூலம், குடியிருப்பாளர்களும் பாதசாரிகளும் குப்பைத் தொட்டிகளில் உள்ள கியூஆர் குறியீட்டை வருடி, அவை நிரம்பியிருப்பது குறித்து துப்புரவுக் குழுவினருக்குத் தெரிவிக்கலாம்.
இந்த அறிவிப்பைப் பெற்றவுடன், துப்புரவுப் பணியாளர்கள் குப்பைத் தொட்டிகளை விரைவாகச் சுத்தம் செய்யச் செல்வார்கள்.
இந்த முயற்சி, நகர மன்றத்தின் தற்போதைய தினசரி இருமுறை குப்பை அகற்றும் பணிகளுக்குத் துணையாக அமைவதோடு, பொதுவான இடங்களை மிகவும் சுறுசுறுப்பாகவும் சரியான நேரத்திலும் பராமரிக்க உதவுகிறது.
“இது ஒரு தொடர்ச்சியான பயணம். எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் நானும் எங்கள் குடியிருப்பாளர்களுக்குச் சேவை செய்ய, நாம் பகிரும் சூழலை மேம்படுத்த உதவும் இந்த வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வோம்.
“நாங்கள் தொடர்ந்து அடிப்படை அளவிலான தீர்வுகளை ஊக்குவிப்போம், மேலும் செயல்முறைகள் மற்றும் அமைப்புகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்த யோசனைகளை வரவேற்போம். நமது நகரத்தைத் தூய்மையாகவும் இனிமையாகவும் வைத்திருப்பது ஒரு கூட்டு முயற்சியாகும், இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு,” என திருவாட்டி டின் குறிப்பிட்டார்.

