தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் இசையின் புதிய பரிணாமம் – ‘அன்றும் இன்றும்’ நிகழ்ச்சி

2 mins read
809802b7-86b2-44c7-b35f-aba64202e9e6
‘அன்றும் இன்றும்’ என்ற மாறுபட்ட இசைநிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். - படம்: புத்தாக்க இந்தியக் கலையகம்

தமிழ் இசையின் பொற்காலத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து புத்தாக்க இந்தியக் கலையகம், ‘அன்றும் இன்றும் – A Tamil Time Odyssey’ என்ற மாறுபட்ட இசை நிகழ்ச்சியை அக்டோபர் 4ஆம் தேதி அரங்கேற்றியது.

சிங்கப்பூரின் ஆர்இஎல்சி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகையின் ஆதரவுடன் நிறைவேறியது. நிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு தமிழ் இசையில் திளைத்தனர்.

உள்ளூர்ப் பாடகர்கள் சுவாமிநாதன் ராஜா, ஜெயசம்போ, லட்சுமி சந்திரன், திவ்யஷாலினி, தேஜு, மேக்கன்சியா, ஏஞ்சலீனா, சந்திரன் ஆகியோர் பலதரப்பட்ட பாடல்களைப் பாடி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

சிங்கப்பூர் கலைத் துறையில் சிறந்து விளங்கும் திரு சங்கர் ராஜன், திரு ரா. பத்துமலை, திருவாட்டி முத்துலட்சுமி, திரு எஸ்.பி. சற்குணபாண்டியன் ஆகிய நான்கு கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்பட்டன.

உயிரோட்டத்துடன் நிகழ்ச்சியை வழிநடத்திய படைப்பாளர் ரவி குணா, புத்தாக்க இந்தியக் கலையக இயக்குநர் சி குணசேகரன், சிறப்பு விருந்தினரான இலங்கையைச் சேர்ந்த மூத்த பாடகர் திரு. ந. ரகுநாதன் (இடமிருந்து).
உயிரோட்டத்துடன் நிகழ்ச்சியை வழிநடத்திய படைப்பாளர் ரவி குணா, புத்தாக்க இந்தியக் கலையக இயக்குநர் சி குணசேகரன், சிறப்பு விருந்தினரான இலங்கையைச் சேர்ந்த மூத்த பாடகர் திரு. ந. ரகுநாதன் (இடமிருந்து). - படம்: புத்தாக்க இந்தியக் கலையகம்

மூன்று மணிநேரம் நீடித்த இசை நிகழ்ச்சியில், 20 புகழ்பெற்ற தமிழ் திரைப்படப் பாடல்கள் நேரடி இசையாகக் கணினி மூலம் இசைக்கலைஞர்களால் வழங்கப்பட்டன.

இலங்கையைச் சேர்ந்த மூத்த பாடகர் திரு. ந. ரகுநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தன் இனிய குரலால் அனைவரையும் மயக்கினார்.

பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைத்த கலை வடிவமைப்புடன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், ஹோலோகிராபிக் காட்சிகள், துல்லியமான ஒலி வடிவமைப்பு ஆகியவற்றுடன் தனித்துவ பாணியில் நிகழ்ச்சியைப் படைத்தார் சி. குணசேகரன்.

நிகழ்ச்சிக்கு தமிழர் பேரவை, உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், தமிழர் இயக்கம், மாதவி இலக்கிய மன்றம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஆதரவு வழங்கின.

இது புதிய வகை தமிழ் இசை அனுபவம் என்றும் கலையையும் செயற்கை நுண்ணறிவையும் இணைத்த ஒரு திருப்பம் என்றும் பார்வையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

ரசிகர்கள் சிங்கப்பூரின் பல பகுதிகளிலும் இருந்து வந்து கலந்து சிறப்பித்ததை தன் வாழ்வின் ஒரு பொன்னாள் எனப் பெருமிதப்பட்டார் நிகழ்ச்சி தயாரிப்பாளர், கணினி இசைஞர் சி.குணசேகரன்.


2026ஆம் ஆண்டு மேலும் பல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இணைந்த தமிழ் இசை, கலாசார நிகழ்ச்சிகளைப் புத்தாக்க இந்தியக் கலையகம் நடத்த திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்