மூத்த உயர்மட்ட அரசு அதிகாரியான சோய் ஷிங் குவோக் மார்ச் 31ஆம் தேதி அன்று பதவி விலகும்போது, முன்னாள் ஆகாயப்படைத் தளபதி இங் சீ கெர்ன், ஐசிஸ்-யூசோஃப் இஷாக் ஆய்வுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பார்.
எட்டு ஆண்டுகளாக ஐசிஸ் இயக்குநராகப் பணியாற்றிய திரு சோய், அந்த ஆய்வுக் கழகத்தின் ஆசியான் ஆய்வு மையம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றத் திட்டத்தின் ஆலோசகராகப் பொறுப்பேற்பார்.
ஏப்ரல் 1ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ள திரு இங், 2022 முதல் 2025 வரை மனிதவள அமைச்சின் நிரந்தரச் செயலாளராகப் பணியாற்றியவர்.
அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு, அவர் 2006 முதல் 2009 வரை ஆகாயப்படைத் தலைவராக இருந்தார். பின்னர், பாதுகாப்பு, உளவுப் பிரிவின் இயக்குநர், தற்காப்பு மேம்பாட்டுக்கான நிரந்தரச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் பணியாற்றினார்.
2014 முதல் 2016 வரை சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளராக இருந்த திரு இங், பின்னர் 2017 முதல் 2022 வரை பிரதமர் அலுவலகத்தில் அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்கத்திற்கான முதலாவது நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
திரு சோயின் தலைமையின்கீழ், ஐசிஸ் சிறப்பான அனைத்துலக அங்கீகாரத்துடன் ஒரு முன்னணி ஆய்வு மையமாக வளர்ந்துள்ளது என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.
முன்னாள் துணைப் பிரதமர் கோ கெங் சுவீயின் சிந்தனையில் உதித்த ஐசிஸ், 1968ல் நிறுவப்பட்டது. இது தென்கிழக்கு ஆசியாவின் சமூக மற்றும் அரசியல் போக்குகள், பாதுகாப்பு மற்றும் பொருளியல் துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்விற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் ஆசியான் ஆய்வு மையம் மற்றும் சிங்கப்பூர் ஏபெக் ஆய்வு மையம் ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

