எஸ்யுடிடியில் தொழில்முனைப்பை ஊக்குவிக்கப் புதிய வளாகம்

எஸ்யுடிடியில் தொழில்முனைப்பை ஊக்குவிக்கப் புதிய வளாகம்

2029ல் வளாகம் தயாராகிவிடும்
1 of 2
படம்: சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி)
படம்: சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம்

22 Nov 2026 - 3:17 pm

2 mins read

காலையில் தோன்றிய யோசனையை நண்பகலுக்குள் மாதிரிப்படுத்தி, மாலைக்குள் அதுகுறித்து நிறுவனங்களிடமிருந்து கருத்துகள் பெறுவது,  இன்னும் மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழக (எஸ்யுடிடி) மாணவர்களுக்குச் சாத்தியமாகக்கூடும்.

இதற்கு வழிவகுக்கவுள்ளது, 2029ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ‘எஸ்யுடிடி’யில் திறக்கப்படவுள்ள ‘டைவ் கலெக்டிவ்’ (DIVE Collective) எனும் புதிய ஒருங்கிணைந்த வளாகம்.  

இவ்வளாகத்தில் மாணவர் தங்குமிடங்கள், புத்தாக்க ஆய்வுக்கூடங்கள், புதிய தொழில் நிறுவனங்களுக்கான பணியிடங்கள் ஆகியவை ஒரே இடத்தில் இடம்பெறும். இதனால், மாணவர்களின் யோசனைகளை நடைமுறைப்படுத்தும் பயணம் சுருங்கிவிடும்.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 20), புதிய வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்குத் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில் (வர்த்தக) அமைச்சருமான திரு கான் கிம் யோங் சிறப்பு வருகையளித்துக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தார்.

அடிக்கல் நாட்டு விழாவில் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில் (வர்த்தக) அமைச்சருமான திரு கான் கிம் யோங்கிற்கு (நடுவில்), எஸ்யுடிடி வடிவமைத்த ஒற்றை இறக்கை வானூர்தியை (monocopter) அளிக்கும் எஸ்யுடிடி அறங்காவலர் குழுத் தலைவர் லீ சூ யாங் (வலது). அவர்களுடன் எஸ்யுடிடி தலைவர் பேராசிரியர் பூன் கோக் குவாங்.
அடிக்கல் நாட்டு விழாவில் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில் (வர்த்தக) அமைச்சருமான திரு கான் கிம் யோங்கிற்கு (நடுவில்), எஸ்யுடிடி வடிவமைத்த ஒற்றை இறக்கை வானூர்தியை (monocopter) அளிக்கும் எஸ்யுடிடி அறங்காவலர் குழுத் தலைவர் லீ சூ யாங் (வலது). அவர்களுடன் எஸ்யுடிடி தலைவர் பேராசிரியர் பூன் கோக் குவாங். - படம்: சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம்

‘டைவ் கலெக்டிவ்’ வளாகத்தில் சில முக்கிய கட்டமைப்புகள் இடம்பெறும். 

முதலாவதாக, 687 சதுரமீட்டர் பரப்பளவிலுள்ள ‘இன்னோவேஷன் ஹப்’ எனும் புத்தாக்க நடுவம்.

முப்பரிமாண அச்சுப்பொறிகள், கணினிப் பணியிடங்கள், வகுப்புகளும் போட்டிகளும் நடத்த இடம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட இந்த நடுவத்தில் மாணவர்கள் புத்தாக்கப் படைப்புகளை விரைவாகவும் குறைந்த செலவிலும் உருவாக்க முடியும்.

இரண்டாவது, ‘இன்னோவேஷன் சென்ட்ரல்’ எனும் 470 சதுரமீட்டர் பரப்பளவிலுள்ள திறந்தவெளிப் பகுதி. இங்கு இயந்திர மனிதக் கருவிகள், ஆளில்லா வானூர்திகள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் சோதிக்கலாம்; சோதனைகள் நடைபெறாத வேளைகளில் அவர்கள் இங்கு வந்து படிக்கவும் செய்யலாம்.

மூன்றாவதாக, புதிய நிறுவனங்கள், தொழில்துறைப் பங்காளிகள், நிறுவனங்களின் ஆதரவுடன் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் ஆகியோருக்காக 28 பணியிடங்கள் அமைக்கப்படவுள்ளன. இவை 24 மணி நேரமும் செயல்படும். ஒவ்வொரு பணியிடத்திலும் மேற்கொள்ளப்படும் ஆய்வு, புத்தாக்கப் பணிகள் குறித்த விவரங்கள் அதன் நுழைவாயிலில் காட்சிக்கு வைக்கப்படும். இதன்மூலம் மாணவர்கள் அக்குழுக்களை அணுகி ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் பெற முடியும்.

மேலும், புதிதாகக் கட்டப்படவுள்ள 14 தளங்களைக் கொண்ட இரண்டு கட்டடங்களில் மொத்தம் 662 மாணவர்கள் தங்கலாம். இதனால், எஸ்யுடிடியில் தங்கும் மாணவர் எண்ணிக்கை கிட்டத்தட்ட  60 விழுக்காடு அதிகரிக்கும்.

இவ்வளாகத்தை ‘ஓடபிள்யூஏஏ ஆர்க்கிடெக்ட்ஸ்’ (OWAA Architects) நிறுவனம் வடிவமைத்துள்ளது. ‘டிஎஸ்’ (TS) குழுமமும் ‘தி அசெம்ப்லி பிளேஸ்’ நிறுவனமும் எஸ்யுடிடியுடன் இணைந்து இவ்வளாகத்தை உருவாக்கும்.

எஸ்யுடிடி ஏற்கெனவே கட்டிவரும் ‘டைவ் ஃபிசிக்கல் ஏஐ’ எனும் கல்வி, தொழில்துறை, ஆய்வு நிலையம் அடுத்த ஆண்டு ஜனவரியிலும் புதிய நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் ‘டைவ் காமன்ஸ்’ எனும் வளாகம் அடுத்த ஆண்டு மே மாதத்திலும் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்