மின்சிகரெட்டுகளுக்கு எதிரான புதிய சட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மின்சிகரெட் புகைப்போருக்கான அபராதத்தை ஐந்து மடங்கும் விற்பனையாளர்களுக்கு 20 மடங்கும் கடத்தல்காரர்களுக்கு 30 மடங்கும் உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
புகையிலை (விளம்பரங்கள் மற்றும் விற்பனை கட்டுப்பாடு) (திருத்தம்) மற்றும் இதர விவகாரங்கள் மசோதா பிப்ரவரி 12ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போதைய சட்டத்தின்கீழ் தற்போது நடப்பில் உள்ள இச்சட்டத்தை ‘புகையிலை மற்றும் வேப்பரைசர் கட்டுப்பாட்டுச் சட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்கான அபராதங்களை உயர்த்துவதுடன், குறிப்பிட்ட மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்கள் குறித்த புதிய வரையறையையும் இது அறிமுகப்படுத்துகிறது.
இது இந்தச் சட்டத்தின் வரம்பை விரிவுபடுத்துவதுடன், இத்தகைய பொருள்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்குச் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கவும் வழிவகை செய்யும்.
எட்டோமிடேட் எனும் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தியதால், 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் எட்டோமிடேட் மருந்து போதைப்பொருளைத் தவறான முறையில் பயன்படுத்துவது தொடர்பான சட்டத்தின்கீழ் ‘சி’ பிரிவு போதைப்பொருளாகப் பட்டியலிடப்பட்டது.
இது இந்தச் சமூகச் சீர்கேட்டை ஒடுக்க அதிகாரிகளுக்குப் பெரிதும் உதவியது.
தற்போது, எட்டோமிடேட் தற்காலிகமாகச் சட்டவிரோத போதைப்பொருளாகப் பட்டியலிடப்பட்டுள்ளதால், அதை வைத்திருப்பவர்கள் அல்லது பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் $20,000 அபராதம் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
எட்டோமிடேட் விநியோகம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ஐந்து பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
எட்டோமிடேட்டை சிங்கப்பூருக்குள் கடத்தி வருபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 15 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக அறிவிக்கப்பட்டால் மின்சிகரெட் புகைப்போருக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், புதிய மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டால் மின்சிகரெட் விற்பனை செய்வோருக்கு $200,000 வரை அபராதமும் ஆறு ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படலாம்.
மின்சிகரெட்டுகளைக் கடத்துபவர்களுக்கு $300,000 வரை அபராதமும் 9 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படலாம்.
தற்போதைய நடைமுறையின்படி மின்சிகரெட் புகைப்போருக்கு அதிகபட்சம் $2,000 அபராதம் விதிக்கப்படலாம். மின்சிகரெட் விற்பனை, விநியோகம், இறக்குமதி செய்பவர்களுக்கு $10,000 வரை அபராதமும் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் 2018 முதல் மின்சிகரெட் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதற்கான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டின் கடைசி நான்கு மாதங்களில், மின்சிகரெட் வைத்திருந்ததற்காகவும் பயன்படுத்தியதற்காகவும் 3,500க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். இவர்களில் 366 பேர் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தியவர்கள்.
இந்த மசோதா குறித்த விவாதம் வரும் தேதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

