சிங்கப்பூர்ப் பூமலையில் வருகையாளர்களை இயற்கையுடன் இணைக்கும் அனுபவத்தை வழங்க முற்படும் இயற்கைச் சுற்றுலாப் பாதை ஒன்றைத் தேசிய பூங்காக் கழகம், வியாழக்கிழமை (ஜூன் 11) தொடங்கியுள்ளது.
இயற்கை ஒளி, ஒலிகள், வண்ணங்கள் உள்ளிட்ட கூறுகள் வழி, பார்வையாளர்கள் ஒன்றிணைந்து, மென்மையான, பன்முக உணர்வுபூர்வமான பயணத்தை அனுபவிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய பாதைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பூங்காக் கழகம் (என்பார்க்ஸ்) தெரிவித்துள்ளது.
ஓராண்டு நீடித்த ஆலோசனைகளுக்குப் பிறகு, 150 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாதைக்கு அமெரிக்காவின் இயற்கை வன மருத்துவச் சங்கம் 2026ல் சான்றிதழ் அளித்தது. இந்த இடம் பார்வையாளர்களுக்கு அமைதியான, மெய்மறக்கச் செய்யும் அனுபவத்தை வழங்கும் என்பதை இது குறிக்கிறது.
“இயற்கையோடு இணைந்திருப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது, மனநிலையை மேம்படுத்துவது போன்ற நல்வாழ்வுப் பலன்களைத் தருகிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன,” என்று தேசிய பூங்காக் கழகத்தின் ‘நகர்ப்புற இயற்கை அறிவியல் மையத்தின்’ முதன்மை ஆய்வாளர் ஏஞ்சலியா சியா தெரிவித்தார்.
இயற்கையிலிருந்து கிடைக்கும் நன்மைகள், அதில் செலவிடும் நேரத்தின் அளவை மட்டுமே சார்ந்திருக்காமல், தனிநபர்கள் இயற்கையோடு எவ்வளவு ஆழமாக இணைந்திருப்பதாக உணர்கிறார்கள் என்பதையும் சார்ந்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு முதன்மைக் காடு, ஓர் இரண்டாம்நிலைக் காடு மற்றும் ஒரு நகர்ப்புறப் பூங்கா ஆகிய மூன்று வெவ்வேறு இயற்கைச் சூழல்களில் கவனமுடன் ஆழ்ந்து செலவிடும் நேரத்தின் விளைவுகளை நன்கு புரிந்துகொள்ள என்பார்க்ஸ், ஆய்வு ஒன்றைத் தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பொழுதுபோக்கு நோக்கங்களுக்கான பாதைகளும், தாவர விலங்கினங்களைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் நிகழ்ச்சிகள் இருந்தாலும், இந்தப் பாதை சற்று வித்தியாசமானது என்று பூங்காக்களின் கல்வி மற்றும் தகவல் தொடர்புக்கான துணை இயக்குநர் நடாலி சியோங் கூறினார்.
“இது மக்களை இந்த இடத்துடன் உணர்வுபூர்வமாக இணைப்பதையும், புலன்கள் மூலம் அவர்களை இயற்கையோடு மனப்பூர்வமாக இணைப்பதையும் பற்றியதாகும்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த இடத்தை மேலும் மேம்படுத்தவும் எதிர்காலப் பாதைகளின் உருவாக்கத்திற்கு உதவவும் பார்வையாளர்களின் கருத்துகளைச் சேகரிக்கவும், அவர்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் நடைப்பயணத்திற்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை என்பார்க்ஸ் நடத்தும் என்று திருவாட்டி சியோங் கூறினார்.

