வாகனம் ஓட்டுவோரை மெதுவாகச் செல்லுமாறு எச்சரிக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள், சில தெருக்களையும் விரைவுச்சாலைகளையும் அணுகும்போது ‘ஓபியு’ எனும் உள்வாகனச் சாதனம் மெதுவாகச் செல்லுமாறு எச்சரிக்கும். புதன்கிழமையிலிருந்து (ஜனவரி 28) அது நடப்புக்கு வருகிறது.
ஃபேஸ்புக் பதிவில், நிலப் போக்குவரத்து ஆணையம் அந்தத் தகவலை வெளியிட்டது. அதனை மேலும் பல தோழமைத் தெருக்களுக்கு விரிவுபடுத்தவிருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.
பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதற்காக எடுக்கப்படும் முயற்சிகளைப் பின்பற்றும் தெருக்கள், ‘தோழமைத் தெருக்கள்’ என்று கூறப்படுகின்றன. பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதையும் மக்கள் துடிப்புடன் இயங்குவதையும் ஊக்குவிக்கின்ற அம்சங்களும் அத்தகைய தெருக்களில் இடம்பெற்றிருக்கும்.
அங் மோ கியோ ஸ்திரீட் 31, புக்கிட் பாத்தோக் வெஸ்ட், தெம்பனிஸ் அவென்யூ 9, தோ பாயோ லோரோங் 1ஏ, லோரோங் 2, வெஸ்ட் கோஸ்ட் ரோடு ஆகியவற்றை அணுகும்போது வாகனம் ஓட்டுவோர் உள்வாகனச் சாதனத்தில் எச்சரிக்கைகளைப் பெறுவர்.
ஆணையத்தின் தோழமைத் தெருத் திட்டத்தில் அந்த ஐந்து அக்கம்பக்க வட்டாரங்களும் இடம்பெறுகின்றன. திட்டம், 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அக்கம்பக்க வட்டாரங்களின் முக்கியப் பகுதிகளில் பாதசாரிகளுக்கும் சைக்கிளோட்டிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பளிப்பது அதன் நோக்கம்.
ஆறு விரைவுச்சாலைகள் திட்டத்தின்கீழ் வருகின்றன. அவை: பீடோக் நார்த்துக்குச் (வெளிவழி 8ஏ) செல்லும் தீவு விரைவுச்சாலை (சாங்கி), லென்டோர் அவென்யூவுக்குச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலை (புக்கிட் தீமா விரைவுச்சாலை), கிளமெண்டி அவென்யூ 6க்குச் செல்லும் தீவு விரைவுச்சாலை (துவாஸ்), தெம்பனிஸ் அவென்யூ 5க்குச் (வெளிவழி 4பி) செல்லும் தீவு விரைவுச்சாலை (சாங்கி), கிராஞ்சி விரைவுச்சாலைக்குச் (தீவு விரைவுச்சாலை) செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலை (தீவு விரைவுச்சாலை), ரோச்சோர் ரோட்டுக்குச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே (ஷியர்ஸ் அவென்யூ) வெளிவழி.
அந்த ஆறு விரைவுச்சாலைகளின் வெளிவழிகளிலும் தற்போதுள்ள “உங்கள் வேகம்” அறிவிப்புகளுக்கு மாற்றாகப் புதிய முயற்சி அமையும் என்று ஆணையம் சொன்னது. வாகன ஓட்டுநர்களுக்கு வேக வரம்பைச் சொல்லவும் அவர்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கவும் அது துணைபுரியும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

