நவீன வசதிகளுடன்கூடிய துடிப்புடன் மூப்படைதலுக்கான புதிய நிலையம்

2 mins read
94cb16b7-e9cd-4d78-a478-7aafe8e303a0
நவீன வசதிகளுடன்கூடிய துடிப்புடன் மூப்படைதலுக்கான புதிய நிலையம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நவீன வசதிகளுடன்கூடிய துடிப்புடன் மூப்படைதலுக்கான புதிய நிலையம் ஒன்று பூன் லேயில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையம், மக்கள் செயல் கட்சி அறநிறுவனத்தின் மூத்தோர் பராமரிப்புப் பிரிவான பிசிஎஃப் ஸ்பார்க்கல் கேரின் இத்தகைய ஐந்தாவது நிலையமாகும்.

புளோக் 631, ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 65ல் அமைந்துள்ள 450 சதுர மீட்டர் பரப்பளவிலான இப்புதிய நிலையம், பல நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது.

முன்னர் பிள்ளைப் பராமரிப்பு நிலையமாக இருந்த அந்த இடம் இப்போது மூத்தோருக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நிலையத்தில், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு சமூகக் காப்பிக்கடையுடன் கேமிஃபைட் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட முதியவர்களை ஈர்ப்பதற்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு விளையாட்டு அரங்கமும் உள்ளது.

இந்த வசதிகளைப் பயன்படுத்த மூத்தோர் எந்தச் செலவும் செய்யத் தேவையில்லை. அவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தால் மட்டும் போதும்.

இது முதியவர்கள், இளையர்கள், குடும்பத்தினரிடையே அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சரும், சமூக சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிலையத்தைத் திறந்து வைத்தார்.

அவருடன் கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சரும், மக்கள் செயல் கட்சி அறநிறுவனத்தின் நிர்வாகக் குழுத் தலைவருமான ஜனில் புதுச்சேரியும் கலந்துகொண்டார்.

நிலையத் திறப்புவிழாவுக்கு வருகை புரிந்த அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மூத்தோர்.
நிலையத் திறப்புவிழாவுக்கு வருகை புரிந்த அமைச்சர் டெஸ்மண்ட் லீ, மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மூத்தோர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறப்புரையாற்றிய அமைச்சர் டெஸ்மண்ட் லீ மூத்தோர் பராமரிப்பு குறித்துப் பேசினார்.

“சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மூத்தோர் நலமாக மூப்படைய அரசாங்கம் தொடர்ந்து அவர்களுக்குப் பல திட்டங்களை ஏற்பாடு செய்யும். குறிப்பாகச் சுகாதார அமைப்புகளுடன் கைகோத்து மூத்தோருக்குத் தேவையான சுகாதாரப் பரிசோதனைகளை வழங்குவது, மூத்தோரின் சமூக ஈடுபாடு, உடல்நலம் போன்றவற்றில் கவனம் செலுத்துதல், மூத்தோர் தொண்டூழியம் புரிய வாய்ப்புகள் வழங்குதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்,” என்று தெரிவித்தார் திரு டெஸ்மண்ட்.

இந்த நிலையம், பூன் லே பகுதியில் வாழும் நூற்றுக்கணக்கான மூத்தோருடன் நடத்தப்பட்ட உரையாடல்களுக்குப்பின் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற முதியவர்கள் பலர் தங்களை வரவேற்கக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அக்கம்பக்க நிலையத்தை விரும்பியதன் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

சமூகக் காப்பிக்கடையில் மூத்தோர் காலைச் சிற்றுண்டிக்கு முட்டைகள், காபி, டீ போன்றவற்றை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

மூத்தோர் சமூகக் காப்பிக்கடையில் இலவசமாகக் காலைச் சிற்றுண்டியைப்  பெற்றுக்கொள்ளலாம்.
மூத்தோர் சமூகக் காப்பிக்கடையில் இலவசமாகக் காலைச் சிற்றுண்டியைப் பெற்றுக்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும், பின்பால், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளைக் கொண்ட விளையாட்டு அரங்க வசதியும் இந்த நிலையம் கொண்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, இத்தகைய முயற்சி வெவ்வேறு தலைமுறையைச் சார்ந்தோருக்கிடையே பிணைப்பை ஏற்படுத்த வழியமைக்கும் என்றார்.

மூத்தோர் சிறப்பான வழியில் மூப்படைய அரசாங்க அமைப்புகள் பல ஒருங்கிணையும் என்றும் டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.

மூத்தோருக்கு ஏதுவான பல வசதிகள் புதிய நிலையத்தில் உள்ளன.
மூத்தோருக்கு ஏதுவான பல வசதிகள் புதிய நிலையத்தில் உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்