கேலாங் சிராய் சந்தையின் கார் நிறுத்துமிடத்தில் புதிய மின்னணு அதிகாரி

1 mins read
5f22694f-89dd-4c23-8dbf-f3a742f569f1
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் உரிமத் தகடுகளை மின்னணு அமலாக்க அதிகாரி பதிவு செய்வார் எனத் தமது ஃபேஸ்புக் பதிவில் டாக்டர் ஃபைஷால் இப்ராஹிம் கூறினார். - படங்கள்: ஃபைஷால் இப்ராஹிம் / ஃபேஸ்புக்

கேலாங் சிராய் உணவங்காடி நிலையம், சந்தையுடன் இணைக்கப்பட்ட அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைக் கண்காணிக்க புதிய மின்னணு கண்காணிப்பு முறை அமல்படுத்தப்படவுள்ளது.

அதனை முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும் உள்துறை மூத்த துணையமைச்சருமான டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 10) வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

மின்னணு அதிகாரி போன்ற ஒன்று நிறுவப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்த அமைப்பை உள்ளூர் நிறுவனமான ‘ஸ்மார்ட்கார்ட்’ தயாரித்துள்ளது.

“கேலாங் சிராய் ரோடு புளோக் இரண்டில் உள்ள அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தின் 3A தளத்தில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதாகப் பல புகார்கள் வந்தன.

“அமலாக்க அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டபோதிலும், அவர்கள் சென்றபிறகு மீண்டும் அவ்விடத்தில் நெரிசல் ஏற்படுகிறது.

“இதனைத் தடுக்கும் பொருட்டு முன்னோடித் திட்டமான மின்னணு அமலாக்க அதிகாரி அமைப்பை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது.

“வாகன ஓட்டிகள் நெரிசல் ஏற்படுத்துவதை அந்த மின்னணு அதிகாரி தடுப்பார். மீறுவோரின் உரிமத் தகடுகள் பதிவுசெய்யப்பட்டு, அவர்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படலாம்,” என டாக்டர் ஃபைஷால் தமது பதிவில் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்