மின்சார வாகனங்கள், மின்சாரத்திலும் பெட்ரோலிலும் இயங்கும் பிளக்-இன் வாகனங்கள் (பிஎச்இவி) ஆகியவற்றின் உரிமையாளர்கள் அவற்றுக்கான சிறப்புப் பதிவு எண் தட்டுகள் எந்த வடிவத்தில் இருக்கவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரியப்படுத்தலாம்.
அதற்கான கருத்தாய்வு இணையத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) முதல் வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறும். பதிவு எண் தட்டுகளை வடிவமைக்கும் பணிகளின் இறுதிக் கட்டத்தின்போது அந்த வாகன உரிமையாளர்களின் விருப்பங்கள் கருத்தில்கொள்ளப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் வியாழக்கிழமை (செப்டம்பர் 24) கூட்டறிக்கையில் தெரிவித்தன.
மூன்று வடிவங்கள்
மூன்று வடிவங்களிலிருந்து வாகன உரிமையாளர்கள் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கலாம். முதல் வடிவத்தில் வெள்ளை நிறத்தில் பதிவு எண் கருநீல நிறத் தட்டில் இருக்கும். இரண்டாம் வடிவத்தில் கறுப்பு நிறப் பதிவு எண் இளநீல நிறத் தட்டில் இருக்கும். மூன்றாவது வடிவத்தில் கறுப்பு நிறப் பதிவு எண் இளம்பச்சை நிறத் தட்டில் இருக்கும்.
இளம்பச்சை நிறத் தட்டைக் கொண்ட வடிவம், கடந்த மார்ச் மாதம் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் காட்டப்பட்ட மூன்று வடிவங்களில் ஒன்று என நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
ஒன்மோட்டோரிங் இணையத்தளம்வழிக் கருத்தாய்வு
கருத்தாய்வு, ஒன்மோட்டோரிங் இணையத்தளத்தில் வெள்ளிக்கிழமை முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை இடம்பெறும். அதில் ஒரு ‘பேனர்’ வடிவ விளம்பரத்தை வருடினால் பயனர்கள் ‘ஃபோர்ம்எஸ்ஜி’ (FormSG) தளத்தில் உள்ள கருத்தாய்வுக்குக் கொண்டு செல்லப்படுவர். பயனர்கள் சிங்பாஸ் விவரங்களைக் கொண்டு கருத்தாய்வில் பங்கேற்கலாம்.
பதிவுசெய்யப்பட்ட ஒவ்வோர் உரிமையாளரும் ஒரு வாக்கு அளிக்கலாம். தனிநபர்கள், நிறுவனங்கள் இருதரப்பினருக்கும் இது பொருந்தும்.
ஒரு தரப்பு பலமுறை வாக்களித்திருந்தால் ஆக அண்மைய வாக்கு மட்டுமே கருத்தில்கொள்ளப்படும். தனிப்பட்ட முறையிலும் நிறுவனத்தின் சார்பிலும் வாக்களிக்கும் ஒருவர் இரு வாக்குகளை அளிக்கலாம்.
“வித்தியாசப்படுத்தப்படும் இந்த வாகனப் பதிவு எண் தட்டுகள் மின்சார வாகன, பிஎச்இவி வாகன உரிமையாளர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டவையாகும். அதனால், இறுதிக் கணக்கெடுப்பில் பதிவுசெய்யப்பட்ட மின்சார வாகன, பிஎச்இவி உரிமையாளர்களின் வாக்குகள்தான் கருத்தில்கொள்ளப்படும்,” என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
