வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் முக்கிய விவகாரங்களைத் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயின் குழுவுடன் இணைந்து தெரிந்துகொண்டு வருகிறார் மக்கள் செயல் கட்சியின் புதுமுகம் நட்டாஷா சோய்.
வர்த்தகத் தொழிற்சங்கவாதியான திருவாட்டி சோய் புதன்கிழமை (ஏப்ரல் 2) ஜாலான் மாஸ் குனிங்கில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் டெஸ்மண்ட் லீயுடன் காணப்பட்டார்.
அதுகுறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் லீ, திருவாட்டி சோய் தமது மக்கள் செயல் கட்சிக் குழுவில் சேர்ந்துள்ளதாகவும் துடிப்புடன் மூப்படைதல் தொடர்பாகவும் இளையர்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் அவர் பங்களிப்பார் என்று நம்புவதாகவும் சொன்னார்.
திருவாட்டி சோய் கடந்த சில வாரங்களாக வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் இடம்பெறும் சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
புதிய வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவர்.
அண்மை மாதங்களாக 2020ஆம் ஆண்டு போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் அணி வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் காணப்பட்டது. தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியொங் மன் வாய், திருவாட்டி ஹேசல் புவா இருவரும் அவர்களில் அடங்குவர்.
இதற்குமுன் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியை முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் வழிநடத்தினார். கடந்த ஆண்டு அவர் அன்பளிப்பு வாங்கியதாக முன்வைக்கப்பட்ட வழக்கை அடுத்துப் பதவி விலகினார்.

