புதுமுகம் ‌‌‌ஷான் லோ ஜாலான் புசார் தொகுதிக்குப் பொருத்தமானவர்: அமைச்சர் ஜோசஃபின் டியோ

1 mins read
cbe872b9-f1e0-4cf7-8803-b705f4293d47
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோவுடன் நிதியமைச்சின் முன்னாள் இயக்குநர் ‌‌‌ஷான் லோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜாலான் புசார் குழுத்தொகுதியின் குடியிருப்பாளர்களைக் கவனித்துகொள்ள நிதியமைச்சின் முன்னாள் இயக்குநர் ‌‌‌ஷான் லோ மிகப் பொருத்தமானவர் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

திரு ‌‌‌ஷானை ஜாலான் புசார் குழுத்தொகுதியில் களமிறக்க பிரதமர் லாரன்ஸ் வோங் ஒப்புக்கொள்வார் என்று உறுதியுடன் நம்புவதாகத் திருமதி டியோ குறிப்பிட்டார்.

விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெற்ற பிள்ளைகளுக்கான எஸ்ஜி60 கேளிக்கை நிகழ்ச்சியில் திரு லோ அங்குப் போட்டியிடுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குத் திருமதி டியோ பதிலளித்தார்.

மக்களின் தேவைகளைச் சந்திக்க முடிந்த அளவு வலுவான ஓர் அணியைத் திரட்ட முயன்றுள்ளதாகச் சொன்ன அவர், பல கண்ணோட்டங்கள் கொண்டவர்களைக் கடந்த சில ஆண்டுகளில் ஒன்றுசேர்க்க முடிந்ததாகக் கூறினார்.

நிதியமைச்சின் பாதுகாப்பு, மீள்திறன் திட்டங்களுக்கு 38 வயது திரு லோ இயக்குநராக இருந்தார். ஏப்ரல் 12ஆம் தேதி பிரதமர் வோங் காணொளி மூலம் அறிமுகம் செய்த எட்டு மக்கள் செயல் கட்சியின் புதுமுகங்களில் திரு லோவும் ஒருவர்.

2024, 2025 ஆகிய ஆண்டுகளில் திரு லோ வரவுசெலவுத் திட்ட இயக்குநராகவும் பொறுப்பு வகித்தார். அந்த இரண்டு வரவுசெலவுத் திட்டங்களிலும் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டம் அறிமுகம் கண்டது.

2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிதியமைச்சில் சேர்ந்த திரு லோ, சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டு, எஸ்ஜி60 பற்றுச்சீட்டு ஆகிய திட்டங்களிலும் பணியாற்றினார்.

குறிப்புச் சொற்கள்