மக்கள் செயல் கட்சி அடுத்த சில நாள்களில் தேர்தலில் களமிறங்கும் மேலும் சில புதிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் என்று பிரதமரும் கட்சியின் தலைமைச் செயலாளருமான லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். வரும் பொதுத் தேர்தலில் மொத்தம் 32 பேர் புதிய வேட்பாளர்களாகக் களமிறங்குவர் என்றார் அவர்.
புதன்கிழமை (17 ஏப்ரல்) கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் வோங், 32 பேரில் 24 வேட்பாளர்கள் மக்கள் செயல் கட்சி வசமுள்ள குழுத்தொகுதிகளில் களமிறங்குவர் என்றார்.
புதிய வேட்பாளர்களில் எட்டுப் பேர் எதிர்க்கட்சி வசமுள்ள குழுத்தொகுதிகளில் போட்டியிடுவர்.
கடந்த சில தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிய வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
அவர்கள் சிங்கப்பூர் ஆயுதப்படை, பொதுச் சேவை, தனியார் துறை, தொழிற்சங்கங்கள், அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து வந்துள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவதாகப் பிரதமர் சொன்னார்.
தேர்ந்தெடுக்கப்பட்டால் புதிய வேட்பாளர்கள் சிலர் அடுத்த 5ஜி குழுவின் மையமாக இருப்பார்கள் என்றார் அவர்.
“புதிய முகங்களை அறிமுகப்படுத்த மிகக் கடுமையாக உழைத்தேன். எதிர்காலத்திற்கு நாம் தயாராக இது கண்டிப்பாக வழியமைக்கும்,” என்று நம்பிக்கை அளித்தார் பிரதமர் வோங்.
தொடர்புடைய செய்திகள்
புதிய முகங்களை அறிமுகப்படுத்தும் அதேநேரத்தில் பதவி இறங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதையும் தாம் கூடிய விரைவில் அறிவிக்கவிருப்பதாக அவர் சொன்னார்.
“பதவி இறங்குவது எளிதன்று. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் குடியிருப்பாளர்களுடன் மிக நெருக்கமான உறவை உருவாக்கியிருப்பாளர்கள். இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி புதுப்பிப்பின் அவசியத்தைப் புரிந்துகொண்டுள்ளனர்,” என்று திரு வோங் தெரிவித்தார்.
“பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பதவி இறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் கௌரவிப்போம்,” என்று அவர் கூறினார்.
பிரதமர் வோங் அறிமுகப்படுத்திய புதுமுகங்களில் இந்தியர் மூவர் இடம்பெற்றுள்ளனர். தேசியத் தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்திய தினேஷ் வாசு தாஸ், எலும்பியல் மருத்துவர் ஹமீது ரசாக், நீண்ட நாள் தொழிற்சங்கவாதியான ஜெகதீஸ்வரன் ராஜு ஆகியோர் அவர்கள்.
சிறந்த வேலைவாய்ப்புகளுடன் ஒளிமயமான பொருளியல் கொண்ட நாட்டை அமைக்கக் கட்சி போட்டியிடும் என்று கூறிய பிரதமர் வோங், கல்விமுறை தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றார்.
“சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் வீடுகள், பசுமை நிறைந்த நீடித்த நிலைத்தன்மை கொண்ட நகரம், விளையாட்டு, கலாசாரம், கலைகள் ஆகியவற்றை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வது போன்றவற்றிலும் கட்சி கவனம் செலுத்தும்,” என்று திரு வோங் கூறினார்.
இந்தத் தேர்தல் அறிக்கை சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் மக்கள் செயல் கட்சி வழங்கும் வாக்குறுதி என்று குறிப்பிட்ட பிரதமர் வோங், சிங்கப்பூரர்களுடன் இணைந்து நின்று அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கக் கடப்பாடு கொண்டுள்ளதாக வலியுறுத்தினார்.
“இந்தத் தேர்தல் போட்டித்தன்மையுடன் விளங்கும். மக்கள் செயல் கட்சியினர் கடந்த ஐந்தாண்டுகளாகப் பலவற்றைச் செய்துள்ளனர். மாறிவரும் உலகில் மக்கள் மீது தொடர்ந்து அக்கறை செலுத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில்தான் மக்களின் வாக்கைப் பெறவிருக்கிறோம்,” என்றார் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் களமிறங்கும் டாக்டர் ஹமீது ரசாக்.
“மக்கள் செயல் கட்சியினர் தற்போதைய விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் தொலைநோக்குடன் செயல்படுகின்றனர். மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இந்தக் கட்சியில் இணைந்து செயல்பட விழைகிறேன்,” என்றார் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் களமிறங்கும் ஜெகதீஸ்வரன் ராஜு.

