தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிடிஓ வீடுகளை வாங்க உதவும் புதிய வசதிகள்

2 mins read
833b84b9-6252-4834-9028-3d9fb26e572b
பிடிஓ வியுவர் என்ற குழு தயாரித்த முப்பரிமாண காணொளி மூலம் வீடுகள் எப்படி இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளலாம். - படம்: திருவாட்டி கோ, திரு ஜேக் சுவா.

தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீடுகளை வாங்கும் முன் அவற்றைச் சுற்றிப் பார்க்க வாய்ப்பளிக்கிறது ஒரு முப்பரிமாணக் காணொளி.

பிடிஓ வியுவர் (BTO Viewer) குழு தயாரித்து விற்பனை செய்யும் அந்தக் காணொளி, வீடுகளைத் தேர்வுசெய்ய வாடிக்கையாளர்களுக்கு உதவ அண்மையில் வெளிவந்த சேவைகளில் ஒன்று.

பிடிஓ வீடுகள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் காணொளியை பிடிஓ வியுவர் குழு $18க்கு வழங்குகிறது. குழு உறுப்பினர்களில் ஒருவரான திருவாட்டி கோ, 2024ஆம் ஆண்டு டிசம்பரில் பிடிஓ வீட்டைப் பதிவுசெய்தபோது அது எப்படி இருக்கும் என்பதைக் காண்பதில் சிரமம் இருந்ததாகக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் பிடிஓ வியுவர் குழு அமைக்கப்பட்டது என்றார் அவர்.

ஜனவரியில் குழு தொடங்கியதிலிருந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட காணொளிகள் விற்கப்பட்டன.

மார்ச் மாதம் திரு ஜேக் சுவா, 42, பிடிஓமைஹோம் (BTOmyhome) சேவையை அறிமுகம் செய்தார். அவர் உருவாக்கிய வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் என்னென்ன பொருள்களை எங்கு வைக்கலாம் என்பதை வடிவமைத்துக்கொள்ள முடியும்.

அவர் இதுவரை 21 முப்பரிமாண மாதிரிகளை விற்பனை செய்துள்ளார்.

“எனது வாடிக்கையாளர்கள் புது வீட்டுச் சாவியைப் பெற ஆர்வத்துடன் இருந்தனர். ஒருசிலர் வாஸ்துவைத் திட்டமிடுவதற்கும் முப்பரிமாண மாதிரிகளைப் பயன்படுத்தினர்,” என்றார் திரு சுவா.

ஸ்கெச்அப் திட்டம் மூலம் திரு ஜேக் சுவா, தஞ்சோங் ரூவில் உள்ள நாலறை வீட்டின் முப்பரிமாண மாதிரியை உருவாக்கினார்.
ஸ்கெச்அப் திட்டம் மூலம் திரு ஜேக் சுவா, தஞ்சோங் ரூவில் உள்ள நாலறை வீட்டின் முப்பரிமாண மாதிரியை உருவாக்கினார். - படம்: ஜேக் சுவா

பல்லூடகத் தொழில்நுட்ப, வடிவமைப்புத் துறையில் பட்டதாரியான திரு சுவா, பெரும்பாலும் நாலறை, ஐந்தறை வீடுகளுக்குக் கிட்டத்தட்ட 20 மாதிரிகளைத் தயாரித்துள்ளார்.

இதற்கிடையே, பிப்ரவரி மாதம் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிடிஓ செலெக்ட் (BTO Select) என்ற கணக்கைத் தொடங்கிய திரு பூன் ஆலோசனை சேவைகளுக்கு $620 வாங்குகிறார்.

இவ்வாண்டு இறுதிக்குள் கட்டட வடிவமைப்பு உரிமத்தைப் பெறவிருக்கும் 30 வயது திரு பூன், வாடிக்கையாளர்களுக்குப் புது வீடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஆலோசனை வழங்க முற்படுகிறார்.

குறிப்புச் சொற்கள்